புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஈடுபட்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அதன் தொடர்ச்சியாக லண்டனின் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மைத்திரிபால சிறிசேன அரசும் பேச்சு நடத்தியது. அது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

காணி பொலி அதிகாரங்கள்

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் பேச்சு நடத்தியிருந்தார். ஆனால், அங்கே என்ன விடயங்கள் குறித்து அவர் பேசினார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

மைத்திரிபால சிறிசேன அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையோடு புரிந்துணர்வுடன் செயற்படுவதால் புலம்பெயர் அமைப்புகளுடன் சற்றுக் கூடுதலான உறவை மேற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

அந்த அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன அரசு சில முயற்சிகளை இரகசியமாக எடுத்திருக்கின்றது போல் தெரிகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இரண்டு முதலமைச்சர்களுக்கும் பொதுவாக கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசில் அமைச்சர் ஒருவர் பதவி வகிப்பார் என்றும், அவரிடமே காணி, பொலிஸ் அதிகாரங்கள் இருக்கும் எனவும் மைத்திரி அரசு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாகவே லண்டனில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருந்ததாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அடிப்படையிலேயே எதிர்வரும் டிசம்பர் மாதம் புலம்பெயர் தமிழர் விழா ஒன்றை கொழும்பில் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

தமிழரே அமைச்சர்

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வழங்குவதில் நீண்டகாலமாக சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளது என்றும், எனினும் கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசில் தமிழர் ஒருவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்து, அவரிடம் அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த யோசனை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இருவரும் எற்கனவே உரையாடியுள்ளனர் என்றும், அந்த இணக்கத்தின் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளிலுள்ள சில அமைப்புகளுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்தினார் எனவும் கூறப்படுகின்றது.

இதனால்தான் சட்டத்தரணி சுமந்திரனும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால், சந்திப்பில் கலந்துகொண்ட புலம்பெயர் அமைப்புகள் இதற்கு இணக்கம் தெரிவித்தார்களா இல்லையா என உறுதியாகக்கூற முடியாது.

அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பாக அரசோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையோ இதுவரை உறுதிப்படுத்தவுமில்லை. அனைத்தும் இரகசியமாகவே உளளன.

13ஆவது திருத்தச் சட்டமூலம்

புதிய யோசனையின்படி 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இந்த ஆண்டின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சரமவீர புலம்பெயர் அமைப்புகளிடம் உறுதியளித்துள்ளார் என்றும் ஒரு தகவல்.

புதிய நாடாளுமன்றம் செப்டெம்பர் மாதம் பதவியேற்றதும் இந்த யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று லண்டன் பேச்சுக்களின்போது கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக வடக்கு மற்றும கிழக்கு மாகாண முதலமைச்சர்களின் அதிகாரங்களுக்கு மேலாக மத்திய அரசில் அமைச்சராக இருக்கக்கூடிய தமிழர் ஒருவருக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டு, காணி, பொலிஸ் மற்றும் நிதி விடயங்களைக் கையாளும் அதிகாரங்கள் அந்த அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளன.

இரண்டு மாகாண முதலமைச்சர்களும் அந்த அமைச்சருடன் பேசி தமது மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் யோசனையின் உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

இணைப்பது என்ற கோரிக்கை ரத்து

புதிய நாடாளுமன்றம் கூடும்போது வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்க 13ஆவது திருத்தச்சட்டத்தில் மேற்படி திருத்தங்கள் செய்யப்பட்டு யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஆனால், இந்த யோசனையில் வடக்கு – கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும் தமக்கு சாதகமான புலம்பெயர் அமைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில பிரதிநிதிகளை மாத்திரமே சந்தித்து பேசினார்கள் என்றும், அனைத்து நாடுகளிலும் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்தித்துப் பேசவில்லை எனவும், முழுமையான உடன்பாடுகள் அங்கே எட்டப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அத்துடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏனைய தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த விடயங்கள் பேசப்பட்டதா அல்லது அபிப்பிராயங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண சபைகள் முறை என்பது இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்பது தமிழ் தரப்பில் உள்ள பலரும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், அந்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்து, அதுவும் வடக்கு – கிழக்கு மாகாணம் இணைப்படாத நிலையில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு எந்த வகையில் சாத்தியமாகும் என்ற கேள்விகளும் உள்ளன.

அதேவேளை, இந்த விடயங்களைத்தான் லண்டனில் பேசினோம் என்று அமைச்சர் மங்கள சமரவீர யாருக்கும் கூறவில்லை.

சந்திப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகள் மூலமாகவே மேற்படி தகவல்கள் கசிந்தன. எவ்வாறாயினும், மேற்படி யோசனைகளை தீர்வாக முன்வைக்கும் போது தமிழ்த் தரப்பில் இருந்தும் சிங்கள தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் விமர்சனங்கள் கிளம்பும்போது மேலும் பல உண்மைகள் வெளிவரலாம்.

அரசியல் தீர்வு என்பது நடைமுறை அரசியல் யாப்புகளை திருத்துவதன் மூலம் சாத்தியப்படப்போவதில்லை. மாறாக குழப்பங்களையே அது ஏற்படுத்தும் என்பது பொதுவான விமர்சனம்.

by A.Nixon

Share.
Leave A Reply