சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு பிறப்பால் ஒரு இஸ்லாமியர் என்று சித்தரிக்கும் வகையில், இணைய தளத்தின் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் நேரு குறித்து இடம் பெற்றிருந்த தகவல்களை மோடி அரசு திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விக்கிப்பீடியாவில் எந்த ஒரு விஷயம் அல்லது நபர் குறித்தும் இணைய தளங்களை பயன்படுத்துவோர் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் எடிட் செய்து சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
இருப்பினும் சர்ச்சைக்குரிய வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பாகவோ ஏதேனும் தகவல் சேர்க்கப்பட்டால், அவை விக்கிப்பீடியா ஆசிரியர் குழுவால் நீக்கப்பட்டுவிடும்.
இந்நிலையில் ஜவகர்லால் நேரு குடும்பத்தினர் குறித்து, விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருந்த தகவல்களை மோடி அரசு திருத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“விக்கிப்பீடியாவில் ஜவகர் லால் நேரு மற்றும் மோதிலால் நேரு குறித்து இடம்பெற்றுள்ள தகவல்களை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக நேரு ஒரு முஸ்லீம் என்பது போன்று சித்தரிக்கும் வகையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர் இந்துவா அல்லது முஸ்லீமா என்பது பிரச்னை அல்ல. அவர் ஒரு இந்தியர். இதுகுறித்து மத்திய அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இந்த திருத்தம் மத்திய அரசு அலுவலக ஐபி முகவரியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரந்தீப், மத்திய அரசுக்கு மென்பொருள் சப்ளை செய்யும் தேசிய தகவல் மையத்திலிருந்து இந்த திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளபடி, நேரு குறித்த திருத்தங்கள் விக்கிப்பீடியாவில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது விக்கிப்பீடியாவில் நேரு குறித்து இடம்பெற்றுள்ள தகவல் பக்கத்தில் “நேருவின் தாத்தா கங்காதர். அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.
அவரது பெயர் ஜியாசுதீன் காலி. ஆனால் அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் தனது பெயரை கங்காதர் என்ற இந்து பெயராக மாற்றிக்கொண்டார்.
ஜவகர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அலாகாபாத்தில் உள்ள மிர்கஜ் என்ற சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்தார். இதனை அப்போதைய அலாகாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் நீரஜ் குப்தாவே ஒப்புக்கொண்டுள்ளார்.
அதாவது நேரு பிறந்த வீடு தாசிகள் தங்கியிருந்த இடமாக விளங்கியது. ஆனால் அந்த வீடு துல்லியமாக எங்கே இருந்தது என்பது குறித்த அனைத்து அரசாங்க ஆவணங்களும் தொலைந்துவிட்டன.
அந்த வீட்டை தாசிகள் பல பாகங்களாக பிரித்து, மாற்றியமைத்திருந்தனர். அரசாங்கம் அந்த வீட்டை கையகப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் வீட்டின் இலக்கத்தை கூட மாற்றி இருந்தனர்.
இதனை அப்போதைய அலாகாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் நீரஜ் குப்தாவே ஒப்புக்கொண்டுள்ளார்.
1972 ஆம் ஆண்டு, ஹெச். என். பகுகுணா உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்தபோது நேரு பிறந்த இடமான மிர்கன்ஞ் பகுதியில் அவருக்கு நினைவிடம் ஒன்றை கட்டுமாறு அலாகாபாத் கமிஷனரிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஏனெனில் தூங்கிக்கொண்டிருக்கும் நாயை யாரும் உசுப்பிவிடவோ இந்திய மக்களை உஷார்படுத்தவோ யாரும் விரும்பவில்லை…..” என்ற ரீதியில் போகிறது அந்த எடிட் செய்யப்பட்ட திருத்தங்கள்.
இருப்பினும் இதுகுறித்த புகார் வந்ததை தொடர்ந்து, மேற்கூறிய புதிய திருத்தங்கள் விக்கிப்பீடியா ஆசிரியர்களால் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.