காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ‘‘நெல் பயிரிடும் காலம்’’ தொடக்க விழா நடந்தது. அதில் விவசாய துறை மந்திரி ஹரி பிரசாத் பராஜுலி கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை தன் பக்கம் இழுத்து கட்டிப்பிடித்து அணைத்ததாக தெரிகிறது. அது குறித்த வீடியோ இணைய தளங்களில் பரவியது.

இது நேபாளம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மந்திரி பராஜூலியின் சி.பி.என். –யூ.எம்.எல். கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் நல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அதை தொடர்ந்து மந்திரி பராஜுலி பதவியை ராஜினாமா செய்யும்படி பிரதமர் சுஷில் கொய்ராலா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே மந்திரி கட்டி அணைத்ததாக கூறப்படும் சனு கேசி என்ற 70 வயது பெண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘இது போன்ற சம்பவம் நடைபெற வில்லை. அது தற்செயலாக நடந்தது.

மாறாக மந்திரி என்னிடம் ஆசீர்வாதம் பெற்றார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளும் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தி விட்டன என்றார்.

 

Share.
Leave A Reply