எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களின் முன்னோடிப் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடுகள் குறித்து ஏற்கனவே இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளன.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில், மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராஜேந்திரா ஆகியோரும்,
ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ சார்பில் சிறீகாந்தாவும், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ளனர்.
அதேவேளை, தென்மராட்சியைச் சேர்ந்த, முன்னாள் அதிபர் அருந்தவபாலன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் மனைவி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முடிவுக்கமைய, மாமனிதர் ரவிராஜின் மனைவிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் வெளியிட்ட போதிலும், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.