விழுப்புரம்: திருடியதை காட்டிக்கொடுத்ததால் நான்கு வயது குழந்தையை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் விழுப்புரம் மாவட்டம், சங்காபுரத்தில் நடந்துள்ளது.
சங்கராபுரம் அருகில் உள்ள வடக்கரந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராஜேஸ்வரி மாலை நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் சந்தானலட்சுமி என்பவரின் வீட்டுக்கு விளையாட சென்ற போது, அங்கிருந்த 100 ரூபாயை ராஜேஸ்வரி திருடியதாக கூறப்படுகிறது.
ராஜேஸ்வரி திருடியதை சந்தானலட்சுமியின் மகள் நான்கு வயதான துர்கா பார்த்துள்ளார். திருடிய விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க, ராஜேஸ்வரி குழந்தைக்கு மிட்டாய்களை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால், துர்கா தன் தாயிடம் விஷயத்தை போட்டு உடைத்ததால், ராஜேஸ்வரியின் வீட்டுக்கு சென்று துர்காவின் அம்மா சண்டையிட்டுள்ளார். இதனால், அவமானமடைந்த ராஜேஸ்வரியின் தாய் ராஜேஸ்வரியை கண்டித்து அடித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரம் கழித்து தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த துர்காவை மிட்டாய் வாங்கித்தருவாக ஆசை வார்த்தை கூறி ராஜேஸ்வரி அழைத்திருக்கிறார்.
இதை நம்பி சென்ற துர்காவை, ராஜேஸ்வரி ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பாழடைந்த கிணற்றில் இரக்கமில்லாமல் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
துர்கா தண்ணீரில் அலறித்துடிப்பதை கண்டுகொள்ளாமல் சலனமின்றி வீடு திரும்பியுள்ளார் ராஜேஸ்வரி. இதற்கிடையே விளையாடிக் கொண்டிருந்த துர்கா மாயமானதை பார்த்து கூப்பாடு போட்ட பெற்றோர், ஊர் முழுக்க தேடியுள்ளார்.
எங்கும் கிடைக்காததால் ஆட்டோவில் மைக் செட் வைத்து அறிவித்தபடி பக்கத்து ஊர்களில் தேடியதை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது.
குழந்தை கிடைக்காத சோகத்தில் இருந்த போது, வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற சிலர் துர்கா கிணற்றில் மிதப்பதை பார்த்து தகவல் அளித்துள்ளனர்.
தங்களது பிஞ்சுக் குழந்தை பிணமாக தண்ணீரில் மிதப்பதை பார்த்து துர்காவின் பெற்றோர் கதறி அழுதனர். மரணத்தில் சந்தேகம் இருந்ததால், துர்காவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சில மணி நேரத்தில் கொலைக்கு காரணமான ராஜேஸ்வரியை கைது செய்தனர்.
பழிவாங்கும் உணர்ச்சியில் குழந்தையை சிறுமி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ஆ.நந்தகுமார்
படம்: தே.சிலம்பரசன்