மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வீடு ஒன்று முன்பாக இருந்த மரத்தில் இருந்து விழுந்து கிடந்த விரலிக்காய்களை சாப்பிடுவதற்காக அவற்றை பொறுக்கியபோது குறித்த வீட்டில் இருந்த உரிமையாளர் 3 மாணவர்களையும் கேபல் வயரினால் கட்டி வைத்து தாக்கியுள்ளார்.
இச் சம்பவத்தை அறிந்த பிரதேச மக்கள் 3 மாணவர்களையும் காப்பாற்றி தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
அதன் பின் லிந்துலை பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.
சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த 3 மாணவர்களையும் விசாரணைக்குட்படுத்திய பின் பாதுகாப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேற்படி மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு கட்டப்பட்ட வயரினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தி வருகின்றார்.