ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று, ஒரு சீக்கிய கோவிலுக்கு செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்ய அங்குள்ள வென்ட்வொர்த்வில்லே ரெயில் நிலையத்துக்கு சென்றது. அந்த குடும்பத்தின் ஒன்றரை வயது பெண் குழந்தை, குழந்தைகளுக்கான சக்கர வண்டியில் இருந்தது.

திடீரென அந்த வண்டி தவறி, ரெயில் பாதையில் குழந்தையுடன் விழுந்து விட்டது.

ஆனால் அதே பாதையில், தொலைவில் சரக்கு ரெயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட அந்த குழந்தையின் தாத்தா, ஒரு வினாடி கூட தாமதிக்காமல் ரெயில் வந்துகொண்டிருந்த பாதையில் குதித்து பேத்தியை கண நேரத்தில் தூக்கி காப்பாற்றினார்.

லேசான காயங்களுடன் குழந்தை தப்பித்தது. தாத்தா, எந்த காயமும் இன்றி தப்பினார். இது சினிமா காட்சி போல அமைந்தது.

இது குறித்து அந்த குழந்தையின் சித்தப்பா கூறும்போது, “என் அப்பா ஒரு மிகப்பெரிய காரியத்தை சாதித்து இருக்கிறார். தனது உயிரைப்பற்றி அவர் ஒரு வினாடி கூட சிந்திக்காமல், ரெயில் பாதையில் குதித்து, என் சகோதரர் மகளை காப்பாற்றினார்.

எப்படி இதெல்லாம் நடந்தது என நாங்கள் யாருமே அறியவில்லை. ஆனால் குழந்தை நன்றாக உள்ளது. என் அப்பாவும் நன்றாக இருக்கிறார்” என குறிப்பிட்டார்.

நமது ஊர் போல வென்ட்வொர்த்வில்லே பிளாட்பாரங்கள் சமதளத்தில் அமைந்திருக்கவில்லை. அங்கு பிளாட்பாரம், ரெயில் பாதையை நோக்கி சாய்வாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply