வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை வேட்பாளராக நிறுத்துமாறு இதுவரை தமிழரசுக் கட்சியிடம் கோரவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னை வேட்பாளராக நிறுத்துமாறு இதுவரை எம்மிடம் எழுத்து மூலம் கோரவில்லை. ஊடகங்கள் மூலம் தான் கேட்டு வருகின்றார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் நிறுத்துவதில்லை என ஒரு தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்பினார் எடுக்கப்பட்டது.
சித்தார்த்தன் ஒரு கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில், போட்டியிட அவருக்கு ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தன்னை அனுமதிக்குமாறு அனந்தி சசிதரன் எழுத்து மூலமாகவோ நேரடியாகவோ எம்மிடம் கோரவில்லை.
அவர் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர். எம்மிடம் வந்து கேட்டிருக்கலாம். அதனை செய்யாது ஊடகங்களிடம் தமிழரசு கட்சி தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என கூறி வருகின்றார்.
அவர் வழமையாக ஊடகங்கள், இணையத்தளங்கள் மூலமாகவே அனைத்து விடயங்களை அணுகி வருகிறார்.
அவர் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர் ஆனவர்.
எனினும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்து வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் இருந்தவேளை அவரது கொடும்பாவியை எரித்தமைக்கான சாட்சியங்கள் கூட எம்மிடம் இருக்கின்றன.
இதன் காரணமாகவே அவர் மீது தமிழரசு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. இதுவரை அவர் அதற்குப் பதில் அளிக்கவில்லை.
அதனை வைத்தே நாம் அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கலாம். அவரது மாகாணசபை உறுப்பினர் பதவியையும் பறித்திருக்கலாம். ஆனால் நாம் அதனை செய்யவில்லை.
அவர் தன்னை தேர்தலில் போட்டியில் நிறுத்துமாறு ஈபிஆர்எல்எவ்விடம் கோரிக்கை விடுத்ததாக அறிகிறோம். அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தாலும் அது முறையற்றது.
அந்தக் கட்சி தனக்கு சந்தர்ப்பம் தர இருந்ததை நாங்கள் தடுத்ததாக சொல்வதும் முறையற்றது” என அவர் மேலும் தெரிவித்தார்