சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரி குற்றத்தை ஒப்புக்கொள்ள சம்மதித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த டயற்ற குருல்ல கண்காட்சியின் போது, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரைப் படுகொலை செய்ய முயற்சி நடந்தது.

இந்த படுகொலை முயற்சிக்கு உதவியதாக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ரஞ்சித் சந்திரசிறி பெரேரா கைது செய்யப்பட்டார்.

இவர் இரத்மலானையில் உள்ள இடைத்தங்கல் முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

இவர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரை, இந்த படுகொலைத் திட்டத்துக்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்து வந்திருந்தார்.

எனினும் இந்த திட்டம் தோல்வியில் முடிந்ததுடன் தற்கொலைக்குண்டுதாரி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, விடுதலைப் புலிகளுடன் இணைந்து படுகொலைச் சதியில் ஈடுபட்டதாக, லெப்.கேணல் ரஞ்சித் பெரேராவும் கைது செய்யப்பட்டார்.

தற்கொலைக்குண்டுதாரிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் அவர் 2011ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்டதில் இருந்து லெப்.கேணல் ரஞ்சித் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, நேற்று இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியின் சட்டவாளர் சாலிய பீரிஸ், தமது கட்சிக்காரர், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரைப் படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளத் தயாராக இருப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply