என்னமோ நடக்குது ஒன்றுமே புரியல்ல… மைத்திரி அணி மஹிந்த ராஜபக்சவை ஏமாற்ற நினைக்கிறதா? அல்லது மைத்திரி அணியும், மகிந்த அணியும் சேர்ந்து மக்களை ஏமாற்ற போகிறார்களா??
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் நேற்று கைச்சாத்திட்டுள்ளார்.
அதேவேளை, மஹிந்த ஆதரவு கூட்டணியின் பல முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் கைச்சாத்திட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அவரது ஆதரவுக் கூட்டணியினருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில் தற்போது இவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நேற்று மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவு அணியினரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் பின்னரே அவர் வேட்புமனுவில் கைச்சாத்திட்டதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதேபோல் மஹிந்த ஆதரவுக் கூட்டணியின் உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, தினேஷ் குணவர்த்தன ,உதய கம்மன்பில, உள்ளிட்ட பலரும் நேற்றைய தினம் வேட்புமனுக்களில் கைச்சாதிட்டுள்ளனர்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலரும் நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக வேட்பு மனுவில் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் 13ஆம் திக்கி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்போதே கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.
இது தொடர்பில் நேற்று அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிடுகையில்;
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் முன்னா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாம் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்மை கைவிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்துவதில் கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியிலும் சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது உண்மையாகும்.
ஆனால் தலைமைத்துவ சிக்கல் ஒன்று ஏற்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களில் பல முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிவந்த.
ஆனால் அவை அனைத்துக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
அதேபோல் மஹிந்த அதரவு அணியினர் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் பலமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் களமிறங்கும்.
அதேபோல் யாரை கட்சியின் இணைத்துக் கொண்டுள்ளனர், யார் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்ற பல விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் எம்மால் எதையும் இப்போதைக்கு குறிப்பிட முடியாது. எதிர்வரும் 13ஆம் திகதி இறுதியான வேட்புமனு பட்டியல் தாக்கல் செய்யப்படும்.
அப்போது அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
கைச்சாத்திட்டாலும் மாற்றம் ஏற்படலாம் இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஜனாதிபதி நெருக்கடியில் என்கிறார் ராஜித
ராஜித சேனாரட்ன
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வேட்பு மனுக்களை தொடர்ந்து தயாரித்துக்கொண்டிருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக் ஷ வேட்பு மனுவில் கைச்சாத் திட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதிலும் மாற் றம் ஏற்படலாம். இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனு வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி நெருக்கடியிலேயே உள் ளார்.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவேண்டும் என்று ஒரு தரப்பும் வழங்கக்கூடாது என்று மற்றுமொரு தரப்பும் கூறுவதாலேயே இந்த நெருக்கடி நிலவுகின்றது.
ஜனாதிபதி இரண்டு தரப்புக்களுடனும் பேச்சு நடத்திவருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனது அரசியல் வரலாற்றில் இதுபோன்ற குழப்பமான தேர்தல் நிலையை நான் கண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சரவை பேச்சாளர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்று மீண்டும் இணைந்துகொண்ட தரப்பினர் தேர்தல் வேட்பு மனு விவகாரம் தொடர்பில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளோம்.
இதில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஊழல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்கக்கூடாது என்று இதில் முக்கியமாக கோரியுள்ளோம்.
கேள்வி: உங்களுக்கு நீதி கிடைக்குமா?
பதில்: நீதி கிடைக்கும் என்று நம்புகின்றோம்.
கேள்வி: நீதி கிடைக்காவிடின் ?
பதில்: அதனை அப்போது பார்ப்போம்.
கேள்வி: அந்தக் கோரிக்கையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்குவது குறித்து என்ன குறிப்பிட்டுள்ளீர்கள்?
பதில்: அது தொடர்பான தீர்மானம் எடுக்கும் உரிமையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம். அது குறித்து நாங்கள் எதனையும் குறிப்பிடவில்லை.
கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. வேட்பு மனுக்களை தொடர்ந்து தயாரித்துக்கொண்டிருக்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதிலும் மாற்றம் ஏற்படலாம். இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
கேள்வி: இருந்தாலும் தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு கிடைக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதே?
பதில்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது கூட்டுக் கட்சிகளைக் கொண்டது. இந்நிலையில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்து ஜனாதிபதி இறுதி முடிவு எடுப்பார்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு கொடுப்பது தொடர்பில் உங்கள் நி்லைப்பாடு என்ன?
பதில்: அதனை நான் தெளிவாக கூறியுள் ளேன்.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நியமிக்குமாறு அழுத்தங்கள் வந்ததா?
பதில் அழுத்தங்கள் வந்தன. அவர்கள் கூட்டங்களை நடத்தினர். மக்களை பஸ்களில் வரவழைத்தனர். இந்தவகையில் அழுத்தங்கள் வந்தன.
கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த சிறுபான்மை கட்சிகள் சுதந்திரக் கட்சியின் மாற்றுத் தரப்பினர் ஆகியோரின் நிலை என்னாவது?
பதில்: அந்த அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்துகின்றார்.
கேள்வி: சிவில் அமைப்புக்கள் கேள்வி எழுப்புமா?
பதில்: சிவில் அமைப்புக்களை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தினார். அதாவது ஜனவரி எட்டாம் திகதி மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
கேள்வி: நீங்கள் என்ன கூறினாலும் வேட்பு மனுவில் மஹிந்த கையொப்பம் இட்டுவிட்டாரே?
பதில்: கையொப்பம் இட்டுவிட்டால் இறுதி முடிவு என்று அர்த்தம் இல்லை. ஜனாதிபதி அதனை அங்கீகரிக்கவேண்டும். எனவே நிலைமைகள் மாறலாம். எவ்வாறெனினும் 13 ஆம் திகதிக்குள் முடிவு எடுக்கப்படவேண்டும்.
கேள்வி: வேட்பு மனு தொடர்பில் இறுதி முடிவு எடுப்பது ஜனாதிபதியா? அல்லது வேட்பு மனு சபையா?
பதில்: ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பார்.
கேள்வி: குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு ?
பதில்: குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஆனால் இது அரசியல் என்பதனை நாம் மறக்கக்கூடாது. ஆனால் சிலருக்கு வேட்பு மனு வழங்காமல் இருக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணங்கியுள்ளது.
கேள்வி: அவர்களுக்கு வேட்பு மனு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: அப்போது பார்ப்போம். எமது மக்கள் என்ன கூறுகின்றார்களோ அதனை செய்வோம். வெளியேறுமாறு மக்கள் கூறினால் வெளியேறுவோம்.
கேள்வி: நாட்டில் மாற்றம் ஏற்பட்டு சிறிது காலம் தானே கடந்துள்ளது?
பதில்: ஆம். அந்த சிறிது காலத்தில் நாங்கள் பல சாதனைகளை செய்துள்ளோம். ஆனால் சிலவற்றை செய்ய முடியவில்லை. அடுத்த அரசாங்கத்தில் அதனை செய்வோம். குறிப்பாக 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாமையையிட்டு கவலையடைகின்றோம்.
கேள்வி: ஜனாதிபதி எதனைப்பற்றி சிந்திக்கின்றார்?
பதில்: மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர் எதிர்பாராதவிதமாக கட்சியின் தலைமைப் பதவி கிடைத்தது. எனவே கட்சியை பிளவுபடாமல் அவர் பாதுகாக்கவேண்டும். அவர் இந்தக் கட்சியில் 47 வருடங்களாக இருக்கின்றார். எனவே கட்சியை காப்பாற்றவேண்டும். அவ்வாறான நிலைமையும் உள்ளது.
கேள்வி கட்சியை காப்பாற்ற சென்று 62 இலட்சம் வாக்காளர்களை காட்டிக்கொடுப்பது எவ்வாறு சரியாகும்?
பதில்: அதில் ஒரு பிரச்சினை உள்ளது. இதுபோன்ற பிரச்சினை ஒன்று வரலாம். பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
கேள்வி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்று பிரதமராகி ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால்?
பதில்: அவ்வாறு கொண்டு வந்தால் பார்ப் போம்.
கேள்வி மஹிந்தவுக்கு பிரதமர் வேட்பாளர் வழங்கப்படாதா?
பதில்: நிச்சயமாக வழங்கப்படாது.
கேள்வி: ஜனாதிபதி ஏன் இறுதி முடிவு எடுக்க தயங்குகின்றார்?
பதில்: அவர் ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றார்.
கேள்வி: ஜனாதிபதி நிலையான தலைவராக இல்லை என்று கூறப்படுகின்றதே?
பதில்: ஜனநாயக ரீதியில் செயற்பட்டால் அவ்வாறு கூறுவார்கள். பண்டாரநாயக்கவை விமர்சித்தவர்களே இந்த நாட்டில் உள்ளனர். பிரேமதாச மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் கீழ் செயற்பட்டவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள்.
கேள்வி: மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்படுமா? இல்லையா?
பதில்: இறுதி முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்படும்.
கேள்வி: நீஙகள் விரக்தியில் உள்ளீர்களா?
பதில் இல்லை என்று கூற முடியாது.
கேள்வி: இந்த விவகாரத்தில் ஜனாதிபதி நெருக்கடியுடன் உள்ளாரா?
பதில்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேன நெருக்கடியிலேயே உள்ளார்.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவேண்டும் என்று ஒரு தரப்பும் வழங்கக்கூடாது என்று மற்றுமொரு தரப்பும் கூறுவதாலேயே இந்த நெருக்கடி நிலவுகின்றது. ஜனாதிபதி இரண்டு தரப்புக்களுடனும் பேச்சு நடத்திவருகின்றார். எனவே நெருக்கடியிலேயே உள்ளார்.
கேள்வி: மஹிந்தவுக்கு வேட்பு மனுவை வழங்குவதை நீங்கள் எதிர்க்கின்றீர்களா?
பதில்: மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதருடன் எனக்கு பிரச்சினை இல்லை. அவர் எனது நண்பர். பஷில் ராஜபக்ஷ சில தினங்களுக்கு முன்னர் என்னுடன் பேச்சு நடத்தினார். ஆனால் கொள்கை விடயத்தில் பிரச்சினை உள்ளது.
கேள்வி: விமல் வீரவங்சவும் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளாரே?
பதில்: அதுவொரு பெரிய விடயமல்ல.
கேள்வி: குழப்பமான நிலையாக தெரிகின்றதா?
பதில்: எனது அரசியல் வரலாற்றில் இதுபோன்ற குழப்பமான தேர்தல் நிலையை நான் கண்டதில்லை.
கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது?
பதில்: அவருக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பாதுகாப்பு கோரினால் வழங்கப்படும்.
கேள்வி: அவர் எம்.பி. யாகிவிட்டால்?
பதில்: எம்.பி. க்குரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
.