அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். இதன் போது, தான் தேர்தலில் போட்டியிடுவதாகயிருந்தால் த.தே.கூட்டமைப்பினூடாக விரும்புகின்றேன் என்று கூறினார்.
ஆனால் இதுவரை அவர் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தற்போதைய நிலை என்னவென்று எனக்கு தெரியாது என்றார்.
வடக்கில் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. இன்று வேட்புமனு தாக்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆகியன வடமாகாணத்தில் இன்றைய தினம் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இறுதித் தினமான திங்களன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பிற்பகல் 2.30இற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிற்பகல் 3.00 மணிக்கும் யாழ்., வன்னி தேர்தல் மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக் கட்சி சார்பாக சிவஞானம் ஸ்ரீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அருந்தவபாலன், இராஜேந்திரா ஆகியோரும்…,
ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ந.அனந்தராஜ் ஆகியோரும் களமிறங்கவுள்ளதுடன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ சார்பில் என். ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் களமிறங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி சார்பாக சார்ள்ஸ் இருதயநாதன், றோய்ஜெயக்குமார், சாந்திஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரும்..,
ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன், ரெலோ சார்பாக வினோநோகராதலிங்கம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமாள் பழனியாண்டி (செல்லத்துரை) ஆகியோரும் புௌாட் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் யாழ். மாவட்டத்தில் மகளிர் விவகார முன்னாள் பிரதியமைச்சரும் யாழ்.மாவட்ட தேசிய அமைப்பாளருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் களமிறங்குகின்றனர்.
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பில் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் களமிறங்கவுள்ளனரென அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளராகவும், வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும், திருகோண மலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா முதன்மை வேட்பாளராகவும், அம்பாறை மாவட்டத்தில் ஹென்றி மகேந்திர முதன்மை வேட்பாளராகவும் களமிறங்க வுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இடம்வழங்கப்படாத அனந்தி சசிதரன் நேற்றையதினம் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.