“”புதன்கிழமை இரவு. மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு கிடைக்குமா கிடைக்காதா என்ற கருத்துவாதங்கள் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம். கொழும்பில் மஹிந்த ராஜபக் ஷ தங்கியுள்ள இல்லத்துக்கு சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மஹிந்த ராஜபக் ஷவிடம் வேட்பு மனுவில் கையொப்பத்தை பெற்றுக்கொள்கின்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் ”

இது எவ்வாறு நிகழ்ந்தது? இதற்கு எவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிடம் இருந்து அனுமதி கிடைத்தது? இவை தான் தற்போது மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாகும்.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுவிட்டபோதிலும் இன்னும் இந்த விடயத்தில் ஒரு உறுதியற்ற நிலையை காண முடிகின்றது.

தற்போதைய நிலைமையில் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது என்று கூறப்படுகின்ற போதிலும் அதனை மிகவும் உறுதியாக கூற முடியாத நிலையும் காணப்படுகின்றது என்றே கூறவேண்டும். இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து நிலவுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை அவர் என்ன செய்யப்போகின்றார் என்றும் மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்குவாரா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழாமல் இல்லை. எனவே எந்தவொரு நிலைமையும் உறுதியற்றதாகவே காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அதாவது “”ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வேட்பு மனுக்களை தொடர்ந்து தயாரித்துக்கொண்டிருக் கின்றோம்.

மஹிந்த ராஜபக் ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதிலும் மாற்றம் ஏற்படலாம். இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம்”” என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளமையும் பல சந்தேகங்களை எழுப்பிநிற்கின்றது.

“”மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனு வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேன நெருக்கடியிலேயே உள்ளார். மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவேண்டும் என்று ஒரு தரப்பும் வழங்கக்கூடாது என்று மற்றுமொரு தரப்பும் கூறுவதாலேயே இந்த நெருக்கடி நிலவுகின்றது. ஜனாதிபதி இரண்டு தரப்புக்களுடனும் பேச்சு நடத்திவருகின்றார்” என்றும் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர் எதிர்பாராதவிதமாக கட்சியின் தலைமைப் பதவி கிடைத்தது. எனவே கட்சியை பிளவுபடாமல் அவர் பாதுகாக்கவேண்டும். அவர் இந்தக் கட்சியில் 47 வருடங்களாக இருக்கின்றார்.

எனவே கட்சியை காப்பாற்றவேண்டும். அவ்வாறான நிலைமையும் உள்ளது என்றும் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளமையானது மஹிந்த ராஜபக் ஷ ஐக் கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் போட்டியிடுவது உறுதி என்பதனையும் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னதாக ஐந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.

ஜயவர்த்தன 1978 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார். மேலும் இரண்டு வருடங்கள் பதவிக்காலம் இருந்த நிலையிலும் அவர் 1988 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுவிட்டார். தனது இறுதிக் காலத்தை ஜே. ஆர். ஜயவர்த்தன ஓய்விலேயே கழித்தார்.

அதன் பின்னர் ரணசிங்க பிரேமதாச நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே 1993 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் உயிரிழந்தார்.

அதன் பின்னர் டி.பி. விஜேதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார். ஆனால் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவர் மீண்டும் போட்டியிட விரும்பாமல் 1994 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுவிட்டார். அதன் பின்னர் இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

அவர் தனது இரண்டு தடவை பதவிக்காலத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனையடுத்து 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இரண்டு முறை பதவி வகித்தார். ஆனால் இரண்டாவது பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் மீதமிருந்த நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்தி தோல்வியடைந்தார்.

அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது குறித்த நிறைவேற்று அதிகார முறைமையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கு முன்னர் பதவி வகித்த ஜனாதிபதிகள் ஓய்வுபெற்றுவிட்டனர். சிலர் உயிரிழந்துவிட்டனர். சந்திரிகா குமாரதுங்க அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர் தேர்தல்களில் போட்டியிடவில்லை. எனினும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் தற்போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் வரலாற்றை முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ மாற்றியமைத்துள்ளார் என்றே கூறவேண்டும்.

அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அப்போதைய ஆளும் கட்சியை விட்டு வெளியேறி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக பொது எதிரணியின் ஆதரவுடன் போட்டியிட்டார். அப்போது அவர் முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ வை விமர்சித்திருந்தார்.

தான் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்பதற்கான காரணங்களை அள்ளி வைத்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியும் பெற்றார். ஆனால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எதிர்பாராம விதமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கவேண்டியேற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மஹிந்த ராஜபக் ஷ வெறுமனே இருந்துவிடவில்லை. மாறாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கியஸ்தர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கட்சித்தலைவர்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்தார்.

பல ஆதரவு கூட்டங்கள் அரசியல் காய் நகர்த்தல்கள் என்பனவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக் ஷவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்றும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.

வலியுறுத்தல்கள் வலுவடைய ஆரம்பித்தன. மறுபுறம் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலில் களமிறங்குவதை பல தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்தே ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார் என்றும் மஹிந்த ராஜபக் ஷ தனித்தே போட்டியிடப்போகின்றார் என்றும் தகவல்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில இடங்களில் அண்மைக்காலங்களில் நிகழ்த்திய உரைகளிலிருந்தும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு கிடைக்காது என்பதனையே எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

ஆனால் திடீரென கடந்த புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுவிட்டார்.

இது எவ்வாறு சாத்தியம்? இதற்கு ஏன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினார்? போன்ற கேள்விகளே தற்போது எழுந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடுவதற்கோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடு வதற்கோ அவருக்குள்ள உரிமையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு எவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கலாம் என்பதே பல்வேறு தரப்புக்களினால் தற்போது எழுப்பப்படும் கேள்வியாகும்.

கடும்போக்குவாத தரப்பினர் இந்த விடயத்தில் மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் சிறுபான்மை மக்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது.

மேலும் கடந்தவாரம் வரை மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்கியமைக்கு என்ன காரணம்?

இதில் யாரின் கரம் செயற்பட்டுள்ளது போன்ற கேள்விகள் தற்போது எழுகின்றன. மேலும் இந்தத் தீர்மானத்தின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் தலைமை வகிக்கின்ற காலத்தில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆழமாக சிந்தித்திருக்கலாம்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனு வழங்காவிடின் அவர் தனித்து போட்டியிடலாம் என்றும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு விடும் என்ற நிலை குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிந்தித்திருக்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்த லின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற

காரணத்துக்காகவே மைத்திரி பால சிறிசேனவுககு கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிடுவதா? என்று மைத்திரிபால சிறிசேன எண்ணியிருக்கலாம். இந்தக் காரணங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ

வுக்கு வேட்பு மனு வழங்க தீர்மானித் திருக்கலாம். இந்த ஒரு விடயம் மட்டும் இதில் தாக்கம் செலுத்தி யதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

எது எவ்வாறோ தற்போது மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனினும் இறுதி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற எடுகோளிலேயே இதனைக் கூறவேண்டியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் ? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமர் பதவியை தொடர்ந்து தக்க வைக்க முடியுமா? போன்றவற்றுக்கு மக்களே பதிலளிக்கவேண்டும்.

-ரொபட் அன்டனி-

Share.
Leave A Reply