பாராளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக் ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடவுள்ளனர்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் மூன்று ரணதுங்கக்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை விசேட அம்சமாகும்.
அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டபோதிலும் அவரின் சகோதரர்கள் மூவர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
Shiranthi Rajapaksa and Nirupama Rajapaksa
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
நாமல் ராஜபக்ஷவும் நிருபமா ராஜபக்ஷவும் நேற்று முன்தினம் வேட்புமனு பட்டியலில் கைச்சாத்திட்டனர்.
அத்துடன் சமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் வேட்புமனுவில் கைச்சாத்திடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ரணதுங்க குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடுகின்றனர்.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் ருவன் ரணதுங்க, அர்ஜுனவின் சகோதரரும் மேல்மாகாண முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடுகின்றனர்.
அர்ஜுன ரணதுங்கவும் ருவன் ரணதுங்கவும் நேற்று முன்தினம் வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
எனினும் பிரசன்ன ரணதுங்கவிற்கு கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்ப்பு வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.