2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை, அப்போதைய முதல்வர் கருணாநிதி வேவு பார்க்க முயன்றதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளான ரா, ஐ.பி மற்றும் மாநில காவல்துறையின் உளவுப் பிரிவுகள் செல்போன், இ-மெயில் உள்ளிட்டவற்றின் மூலம் பரிமாறப்படும் தகவல்களை பெறுவதற்கான மென்பொருளை வாங்க இத்தாலி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில்,இது குறித்து அந்த வலைத்தளத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வேவு பார்க்கும் கருவிகளுக்கான தேவை அதிகரித்தது.

அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை வேவு பார்க்க முயன்று வந்தன.

கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலத்தில் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக, அப்போதைய திமுக அரசுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சியினரை வேவு பார்ப்பதற்கு மாநில அரசு முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, இத்தாலியைச் சேர்ந்த ஹேக்கிங் டீம் என்ற நிறுவனத்தை, அதே ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில உளவுத்துறை தொடர்பு கொண்டது.

அதையடுத்து, மார்ச் மாதம் 9ஆம் தேதி ஹேக்கிங் டீம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இரண்டு பேர், சென்னைக்கு வந்தனர்.

வேவு பார்க்கும் கருவிகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்து உளவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply