மெக்சிகோ நாட்டு சிறையில் இருந்து நேற்று தப்பியோடிய சர்வதேச போதை கடத்தல் மன்னனான ‘எல் சாப்போ’ ஜோகுவின் குஸ்மேன் சிறையின் உள்ளே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிச் சென்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த குஸ்மேனுக்கு ‘எல் சாப்போ’ என்ற பட்டப்பெயரும் உண்டு.

அமெரிக்கா முழுவதும் நடைபெறும் கொக்கைன், பிரவுன் ஷுகர், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தலையும், வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஸ்மேன், இந்த தொழிலின் முடிசூடா சக்கரவர்த்தியாக முன்னர் வலம் வந்தான்.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தொழில் முறை மோதல்களிலும், இதுதொடர்பான கொலைகளிலும் இவனுக்கு தொடர்பு இருந்ததால் 1993-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஸ்மேன், கடந்த 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி விட்டான்.

சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

பின்னர், போலீசாரிடம் மீண்டும் பிடிபட்டு மெக்சிகோ மத்திய சிறைக்கு திரும்பிய ‘எல் சாப்போ’ குஸ்மேன் (உள்ளூர் நேரப்படி நேற்று) இரவு 8.52 மணிக்கு தப்பியோடி விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளில் கடைசியாக அவனது நடமாட்டம் பதிவாகி இருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒருவர் மட்டும் நுழைந்து செல்லும் அளவுக்கு ரகசியமாக தோண்டப்பட்டிருந்த அந்த சுரங்கத்தின் வழியாக குஸ்மேன் தப்பியிருக்கலாம் என்று கருதிய போலீசார் அதன் உள்ளே நுழைந்து சென்றபோது, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நீண்டிருந்த அந்த சுரங்கத்தின் மறுமுனை சிறைக்கு அருகாமையில் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள வெட்டவெளியில் முடிவடைந்தது.

குஸ்மேனின் கூட்டாளிகள் இங்கிருந்தபடி, அந்த சுரங்கத்தை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள். இதுபற்றிய ரகசிய தகவல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.

சிறை காவலர்கள் அசந்திருந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு இந்த சுரங்கத்தின் வழியாக அவன் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதும் போலீசார், எப்படியும் குஸ்மேனை வளைத்துப் பிடித்து, மீண்டும் சிறைக்குள் அடைப்போம் என தெரிவித்த போலீசார் முழுவீச்சில் அவனை தேடி வருகின்றனர்.

மெக்சிகோ நகரை அவன் விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையின் அருகாமையில் உள்ள டொலுக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மெக்சிகோ நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

Part-MVD-Mvd6700428-1-1-0Authorities investigate the tunnel that Joaquin “El Chapo” Guzman used to escape from a maximum-security prison.

47602509716875cca7633403041c5743Joaquin Guzman escapes for the second time from a prison in Mexico.

Share.
Leave A Reply