மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான் முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், “கடந்த இரண்டு வாரங்களாக நான் அவமானப்படுத்தப்படுகிறேன் என்பதை அறிவேன்.

என்னை வில்லன் என்கின்றனர். துரோகி என்கின்றனர். காட்டிக் கொடுத்துவிட்டதாக விமர்சனம் செய்கின்றனர்.

என்னைப் போல முன்னொரு போதும் சிறிலங்கா அதிபராக இருந்த எவரும் அவமானங்களைத் தாங்கியிருக்கவில்லை.

இது ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், இலங்கையர்களிடம் உள்ள சுதந்திரத்தை அனுபவிக்கும் துடிப்பைக் காட்டுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு நான் முற்றிலும் எதிரானவன்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான எனது நிலைப்பாட்டின் எந்த மாற்றமும் இல்லை.

மகிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதற்கு எதிராக எழுத்துமூலமான எதிர்ப்பை தெரிவித்தேன்.

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது போலவே, நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார்.

இது மகிந்த ராஜபக்சவின் தவறு. அல்ல. ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கிய பொறிமுறை ஏற்படுத்தியுள்ள தவறு.

அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதாகும்.
எனக்குப் பதிலாக மஹிந்த ராஜபபக்ஷ கட்சியின் தலைவராக இருந்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருக்க மாட்டார். அதனால் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைத்திருக்காது.
மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தால், அரசியலமைப்புத் திருத்தம் சாத்தியப்படாமல் போகும்.

மகிந்தவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு

நான் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானவன். சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் சூழலில், பிரதமராக நியமிக்கக் கூடிய பல மூத்தவர்கள் அங்கே இருக்கின்றனர்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் நான் தெரிவு செய்யப்பட்டேனோ அவற்றைச் செயற்படுத்த முடியும்.

நான் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவேன். எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மகிந்த ராஜபக்சவை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் இரகசிய முயற்சி ஒன்றை அறிந்தே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன்.

நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், ரணில் விக்கிரமசிங்க பதவி இழப்பார்.

அத்தகைய நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க உரிமை கோரும்.

அதன் பின்னர் தேசியப்பட்டியல் மூலம் மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே நாடாளுமன்றத்தைக் கலைத்தேன். அதன் மூலம் அவர்களின் முயற்சியை தோற்கடித்தேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்லில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மாட்டேன். நீதியான நியாயமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவேன்.

ஜனவரி 8 தேர்தலில் வழங்கப்பட்ட ஆணையை பாதுகாப்பேன். அந்தக் கொள்கைக்கு மதிப்பளிக்கும் நாடாளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கிறேன்.”

Share.
Leave A Reply