சிவகங்கை: சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கிளாத்தரி கிராமத்தினை சேர்ந்தவர் முத்தம்மாள். இவருடைய கணவர் இறந்து விட்டதால், முத்தம்மாள் தனது தாய் மற்றும் தனது இரு மகன்களுடன் கிராமத்தி்ன் அருகே வயல் வெளியில் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
கதவுகள் இல்லாத இந்த குடிசை வீட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். விவசாய கூலியான முத்தம்மாள், தனது மகன் ராஜாவை பொறியியல் படிப்பு படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கிளாத்தரி கிராமத்தை சேர்ந்த சிலர், முத்தம்மாள் குடிசை எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீடு முழுக்க எரிந்து வீட்டில் இருந்த நான்கு பேரும் உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளனர்.
வீட்டின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலை எடுத்து, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பயன்படுத்தி குடிசையை கொளுத்தியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை, சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்தார்.
முத்தம்மாளுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்கனவே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து பூவந்தி காவல்நிலையில் முத்தம்மாள் புகார் மனுவும் கொடுத்துள்ளார்.
குடிசை வீட்டில் வசித்ததால், அந்த இடத்தில் இருந்து காலி செய்ய இது போன்று ஒரு மாபாதக செயலை மர்ம நபர்கள் யாரும் செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
– சையது அபுதாஹிர்
படங்கள்: சாய்தர்மராஜ்