இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு மறுத்துவிட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள்கைதிகளாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதா அல்லது இருவரும் கலந்து முடிவெடுக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வழக்கில், இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருந்த முடிவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று புதனன்று இந்த வழக்கை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு விசாரிக்கத் துவங்கியுள்ள சூழலில், அந்தத் தடை தொடர்ந்து நீடிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில், நீதிபதிகள் ஃஎப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சாப்ரே மற்றும் யு.எம்.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்று துவங்கிய இந்த வழக்கின் விசாரணையில், தமிழக அரசின் விடுதலை செய்யும் முடிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இருந்தபோதும் மத்திய அரசு தரப்பில் கோரப்பட்ட காலவகாசத்தை ஏற்றுக்கொண்ட அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அத்தோடு அந்த 21 ஆம் தேதி முதல் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் விடுதலைக்கான தடை நீடிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலதாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த நாளான பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்த மூன்று பேருடன் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு ஏற்கனவே ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அப்போது தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதன் பிறகு தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கூட இந்திய உச்சநீதிமன்றத்தில் இவர்களின் விடுதலையை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.
இந்த மூன்று மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட இந்திய உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகளை உள்ளடிக்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்து சுமார் ஓராண்டு கழித்து இன்று தான் அந்த வழக்கின் விசாரணை துவங்கியுள்ளது.