வங்கதேசத்தில் 13 வயது சிறுவனை கொடூரமாக அடித்துக்கொலை செய்த நபர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேசம் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் சமியுல் ஆலம் ரஜோன் (13) என்ற சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தெருவில் காய்கறி விற்றுவந்துள்ளான்.

இந்நிலையில் சமி அங்குள்ள ரிக்க்ஷாவை திருட முயன்றதாகக் கூறி சிலர் அந்த சிறுவனைப் பிடித்து கட்டிவைத்து இரும்புக் கம்பியால் அவனை அடித்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாத சிறுவன், என்னை அடிக்காதீர்கள், விட்டுவிடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளான், மேலும் தாகம் மிகுதியால் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான்.

ஆனால், ஈவு இரக்கமற்ற மனிதர்கள் அச்சிறுவனை அடித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த கும்பலை சேர்ந்த நபர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவைப் பார்த்த பலர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலையாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே சிறுவனின் உடல் சில்ஹெட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் உடலில் 60க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளி சம்பவம் நடந்த பிறகு சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிவிட்டார். பின்னர் அவர் சவுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இச்சிறுவனின் குடும்பத்தார் தங்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

bangaldesh_child_003bangaldesh_child_002

Share.
Leave A Reply