செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கே உள்ளது என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள அதேவேளை, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அந்த அதிகாரம் இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஆனாலும், மகிந்த ராஜபக்சவே பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவரைத் தாம் பிரதமராக்கி காட்டுவோம் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சவால் விட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று பிபிசி சந்தேசயவுக்கு அளித்த செவ்வியில், சிறிலங்கா அதிபரின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க முடியும் என்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் தவறான வாதம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி, சிறிலங்கா அதிபரே பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.

குறிப்பிட்ட ஒருவரை பிரதமராக நியமிக்கும்படி, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோர முடியும். ஆனால் அதிபர் தான் இறுதியாக தீர்மானிப்பார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றே அமையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் பெரும்பான்மை பலம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும், அரசியலமைப்பு ரீதியாக, பிரதமரை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லை என்றும் நியமிக்கும் உரிமை மட்டுமே அவருக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply