‘வெள்ளை வேன்’… சொல்லும் போதே ஒருவகையான அச்சம். ஆம், கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், சமூக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதும் சிலர் கொலை செய்யப்பட்டதுமே இந்த அச்சத்துக்கான காரணமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் கடந்த ஜூலை 20 ஆம் திகதி மிரிஹானை பொலிஸ் பிரிவின் பொலிஸ் மைதானத்துக்கு அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய வெள்ளை வேன் சிவில் உடையில் இருந்த மூன்று இராணுவ வீரர்களுடனும் ஆயுதங்களுடனும் மிரிஹானை தலைமையக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
குறித்த தினம் இரவு வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அருகாக திருப்பிய வண்ணம் வெள்ளை வேன் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த வேனானது சில குறுக்கு வீதிகள் ஊடாக செல்வதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வெள்ளை வேனில் சந்தேகம் கொண்டுள்ள பொலிஸார் அதனை பின் தொடர்ந்துள்ளனர். WP JH 9244 என்ற இலக்கத்தை கொண்டிருந்த அந்த வேனை பொலிஸார், மிரிஹான பொலிஸ் மைதானத்திற்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதன்போது அந்த வேனுக்குள் 3 பேர் இருந்துள்ளனர். அத்தப்பத்து முதியன்சலகே ஹர்ஷ சமீர அத்தப்பத்து, விதாரணகே வசந்த, ஹேரத் முதியன்சலாகே சுகத் சேனக ஹேரத் ஆகிய மூவர் இந்த வேனில் இருந்துள்ளனர்.
அம்மூவரில் ஒருவர் இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர். ஏனைய இருவரும் இராணுவ காலாட் படையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை பொலிஸ் விசாரணை செய்தபோது சிவில் உடையில் இருந்த அவர்கள் தாம் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகள் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் விசாரணைகளை செய்த பொலிஸார் அந்த வெள்ளை வேனை சோதனை செய்தனர்.
இதன்போது அந்த வேனில் இருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியொன்று அதற்கு பயன்படுத்தப்படும் 13 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
அத்துடன் இராணுவ வாகனங்களை அடையாளப்படுத்தும் சிங்கள எழுத்துக்களுடன் கூடிய 59466 என்ற வாகன இலக்கத் தகடொன்றும் அந்த வேனுக்குள் இருந்துள்ளது. இந்த ஆயுதங்கள் மற்றும் இலக்கத் தகடு ஆகியவற்றை பார்த்தபின்பே பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இது தொடர்பில் உடனடியாக மிரிஹான தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் ஜயலத் மற்றும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான் அனுருத்த ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரவே வேனில் இருந்த 3 இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த மூன்று இராணுவ வீரர்களும் மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குணசேகர ஆகியோரின் மேற்பார்வையில் நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர்.பி.சரத் பிரேமவின் நேரடி கட்டுபாட்டிலேயே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஜயலத் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷான் அனுருத்த ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவே இந்த விசாரணைகளை தொடர்ந்தது.
கைதானவர்கள் இராணுவ வீரர்கள் என்ற ரீதியில், உடன் செயற்பட்ட பொலிஸ் விசாரணைக் குழு இராணுவ தலைமையகத்தை தொடர்பு கொண்டு அது தொடர்பில் விளக்கம் கோரியது.
இதனிடையே கைப்பற்றப்பட்ட வெள்ளை வேனை சோதனை செய்யும் பணி மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
அவரது சோதனைகளின் போதே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதாவது குறித்த வெள்ளை வேனில் இருந்த WP JH 9244 என்ற இலக்கம் போலியானது எனவும், அந்த இலக்கமானது கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மாண கம்பனியொன்றின் கெப்ரக வாகனம் ஒன்றினுடையது என்பதும் அது தற்போது பாவனையில் இல்லை என்பதையும் வெளிப்படுத்தும் போதே பொலிஸாரின் சந்தேகங்கள் மேலும் அதிகரித்தன.
அத்துடன் அந்த வேன் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தன. இதன் போதே அந்த வேனானது 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் புலிகளிடமிருந்து இராணுவத்திற்கு சொந்தமாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
அத்துடன் அந்த வேனை புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புலிகளின் கடற்படை தளபதி சூசை போன்றோர் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையிலேயே புலிகளிடமிருந்து இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்ட வெள்ளை வேன் ஒன்றை போலி இலக்கத் தகட்டுடன் ஆயுதத்துடன் இந்த மூன்று இராணுவ வீரர்களும் ஏன் எதற்காக செலுத்திச் சென்றனர் என்ற சந்தேகம் வலுத்தது.
பொலிஸார் இராணுவத்திடம் கோரிய அறிக்கையும் கிடைக்க தாமதமடையவே மறுநாள் 21 ஆம் திகதி சந்தேக நபர்களை நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது சந்தேக நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே இது தொடர்பில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவப் பொலிஸாரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 இராணுவ வீரர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவிக்கின்றார்.
இந் நிலையில் தான் கடந்த 22 ஆம் திகதி புதனன்று மிரிஹானை தலைமை பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் இணைப்பு அதிகாரியாக கடமையாற்றிவரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை அழைத்து சுமார் ஐந்து மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
உதவி பொலிஸ் அத்திட்சகர் சரத் பிரேம தலைமையிலான குழுவினரே இந்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு மிரிஹான தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரால் பிரசன்ன டீ சில்வா அங்கிருந்து செல்லும் போது பிற்பகல் 1.00 மணியை அண்மித்திருந்தது.
அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குறித்த வெள்ளை வேன் தனது பாதுகாப்புக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது என்பதையும், அதனுள் இருந்த கைத் துப்பாக்கியும் தனது அலுவலக துப்பாக்கி என்பதையும் தோட்டாக்களும் அதனுடையதே என ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும் போலி இலக்கத் தகடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர் கைது செய்யப்பட்ட 3 இராணுவத்தினரும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களே என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வாக்கு மூலம் அளித்த பின்னர் இராணுவமும் கைதான மூவர் தொடர்பிலும் வெள்ளை வேன் தொடர்பிலும் பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் வெள்ளை வேனானது இராணுவத்துக்கு சொந்தமானது எனவும் அதன் இலக்கம் 59466 எனவும் போலி இலக்கத் தகடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட அந்த வேனானது மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் பாதுகாப்பு தொடர்பிலேயே வழங்கப்பட்டிருந்ததாகவும் கைதான மூவரும் கூட அவரது பாதுகாவலர்களே என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவத்தின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் விசாரணைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்குமாறு உத்தரவினை பிறப்பித்தார்.
இந்நிலையில் தற்போது இந்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதன்பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இடம் பெற்று வருகின்றது.
இந்த வெள்ளை வேன் விவகாரமானது தற்போது பல கோணங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. குறிப்பாக அந்த வெள்ளை வேன் கைப்பற்றப்பட்ட இடத்திற்கு அருகிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ ஆகியோரது வீடுகள் உள்ளன. அவர்களை இலக்கு வைத்தே இவ்விராணுவ வீரர்கள் வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
எனினும் அது எந்தளவு தூரம் நம்பகரமானது என்பது கேள்விக்குறியே! ஏனெனில் வெள்ளை வேனும் துப்பாக்கியும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு உரியது என்பது தற்போது வரையான விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் பிரசன்ன சில்வா முன்னாள் செயலாளர் கோத்தபாயவின் நெருங்கிய நண்பர் என்ற ரீதியில் அவரை இலக்கு வைத்த திட்டமொன்றுக்கு சென்றிருக்க மாட்டார் என நம்பலாம்.
எனினும் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்பு அதிகாரிகளை எவரேனும் அவ்வாறானதொரு செயலை செய்ய இயக்கினரா என்றும் ஆராயப்பட வேண்டும். பல கோணங்களில் செய்யப்பட்டு வரும் விசாரணைகள் உடன் நிறைவு செய்யப்பட்டு உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்படல் வேண்டும்.
தற்போது பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெள்ளை வேன் விவகாரம் இதனைவிட ஆழமாக விசாரிக்கப்பட வேண்டியதாகும்.
ஏற்கனவே கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் இரகசிய அறிக்கை ஒன்று ஜனாதிபதிக்கு கையளிக்கப் பட்டுள்ளதாக பொது ஒழுங்குகள் அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையில் தற்போது இராணுவத்தின் உயர் பதவியில் உள்ள மேஜர் ஜெனரல் ஒருவரும் ஓய்வு பெற்ற கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் ஒருவரும் வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இராணுவத்தின் உயர்பதவியில் உள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் வெள்ளை வேன் ஆயுதத்துடன் சிக்கியுள்ளது.
குறிப்பாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவை கடந்த கால வெள்ளை வேன் கடத்தல்களுடன் தொடர்புபடுத்தி பல இணைய ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் கண்டிப்பாக அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.
குறிப்பாக புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு சொந்தமான 767 வாகனங்கள் இலங்கை இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. இவற்றை இராணுவ இலக்கத் தகட்டுடன் பயன்படுத்த அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அனுமதியும் வழங்கியுள்ளார்.
இந் நிலையில் பொலிஸாரால் கடந்த 20 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் உள்ளிட்ட பல வேன்கள், வாகனங்கள் இவ்வாறு இராணுவ உடைமையாக்கப்பட்டவையே.
அப்படியானால் பிரத்தியேக இலக்கங்கள் அற்ற அந்த 767 வாகனங்களையும் இராணுவம் எந்தெந்த இலக்கங்களில் எதற்காக பயன்படுத்தியது என விரிவாக ஆராயப்பட வேண்டும்.
கடந்த கால வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மீது பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அவ்வாறானதொரு பரந்துபட்ட விசாரணை மிக அவசியமாகும்.
குறிப்பாக தற்போது கைப்பற்றப்பட்டுள்ள வெள்ளை வேன் போலி இலக்கத்தகட்டுடன் கையும் மெய்யுமாக அகப்பட்ட நிலையில் அந்த வேனானது இதற்கு முன்னமும் இவ்வாறு போலி இலக்கத் தகட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
எத்தனை முறை அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது? எதற்காக அவ்வாறு பயன்படுத்தப்பட்டது கடந்த கால கடத்தல்களுக்கு அவ்வேன் பயன்படுத்தப்பட்டதா? அதனுடன் இந்த இராணுவ வீரர்களுக்கு தொடர்பு உள்ளதா? போலி இலக்கத் தொடர்பு பின்னணி என்ன போன்ற அனைத்து விபரங்களும் வெளிப்படுத்த ப்படவேண்டும்
இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரின் தகவல்களின் பிரகாரம் இராணுவ வீரர் ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் இராணுவ வாகனத்துக்கு போலி இலக்கத் தகட்டை பொருத்தி நடமாடுவது இராணுவ சட்டங்களையே மீறும் செயற்பாடாகும்.
அப்படியானால் கடந்த 20 ஆம் திகதி வெள்ளை வேனில் சுற்றித்திரிந்த இராணுவ வீரர்கள் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த வாய்ப்பே இல்லை.
அரச நிறுவனங்கள் இராணுவம் உள்ளிட்டவை தமது கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் உள் நுழையும் வெளிச் செல்லும் போது வாகனம் பதிவுப் புத்தகம் ஒன்றை பேணுவது வழமையாகும்.
எனினும் விசாரணைத் தகவல்களின்படி கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் பாதுகாப்பு அமைச்சு இராணுவ தலைமையக வாகனப் பதிவுப் புத்தகங்களில் பதிவாகியுள்ள முறைமையும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாம்.
யுத்தத்தின் பின்னர் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் புதிதாக மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன. அப்படியானால் இந்த வெள்ளை வேன் பதிவு செய்யப்படவில்லை.
பதிவாகாமல் இராணுவ இலக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வேனின் இலக்கத்தகடு மாற்றப்பட்டதன் நோக்கம், பின்னணி என்ன? இதற்கு அந்த வேனில் இருந்த 3 இராணுவ வீரர்கள் மட்டுமல்லாது அந்த வேனை பயன்படுத்திய மேஜர் ஜெனரால் பிரசன்ன டீ சில்வாவும் பொறுப்புக் கூற வேண்டும்.
விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு முழுமையான விபரம் வெளிப்படுத்தப்படும் வரை பொறுத்திருப்போம்…
-எம்.எப்.எம்.பஸீர்-