இலங்கையில் இராணுவம் இருக்கின்றவரையில் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது நாட்டிற்கு அச்சுறுத்தலோ ஏற்படப்போவதில்லை.
அதற்கு இராணுவம் இடமும் அளிக்காது அத்துடன் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவும் இல்லை. என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி. சில்வா தெரிவித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா கண்டிக்கு விஜயம் செய்து ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிப்பட்ட பின்னர் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் கலகம ஹத்ததஸ்ஸி மல்வத்த மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள அவர்களையும் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதன் போது மகாநாயக்க தேரர்கள் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுவது குறித்து இராணுவத் தளபதியிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இராணுவத்தளபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே நான் மிகுந்த பொறுப்புடன் கூறிக் கொள்கின்றேன்.
நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்கப்போவதில்லை.
அதேவேளை சிலர் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது எவ்வகையிலும் உண்மையில்லை. வடக்கு கிழக்கு உட்பட முழு நாட்டினதும் பாதுகாப்பு குறித்தும் முறையான பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பது புதிதாக இராணுவ வீரர்களைச் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற விரிவான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மீண்டும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை.
தூர நோக்குடன் நாட்டின் பாதுகாப்பு நலமேம்பாடுகளுடன் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்றன என்றார்.