இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (வயது 84) சற்று முன்னர் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவகத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த, அப்துல் கலாமுக்கு மாலை 6 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
மேடையில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக, பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் மரணமானார்.
அவரது திடீர் மரணம், இந்தியா முழுவதும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏழு நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா அறிவியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் முன்னேறுவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் அப்துல் கலாம்.
இந்தியாவின் அணுகுண்டு பரிசோதனை, ஏவுகணை பரிசோதனை உள்ளிட்டவற்றில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய இவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
1931 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 15ஆம் நாள் பிறந்த அப்துல் கலாம், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக, 2002ஆம் ஆண்டு தொடக்கம், 2007ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
உயர்ந்த பதவி மற்றும் வாய்ப்புக்களைப் பெற்ற போதிலும், கடைசி வரை எளிமையாக வாழ்ந்த இவர், தனது வாழ் நாள் முழுவதையும், இந்தியாவின் முன்னேற்றத்துக்காக செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது,