மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலாம், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்கம் கலாமின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப அரசு மரபுகளைத் தாண்டி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.

கலாமின் நல்லுடல் இன்று மதியம் 12 மணியளவில் பேக்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் பரப்பளவிலான அரசு இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று காலை அவரது வீட்டிலிருந்து ஜனாஸா தொழுகை எனப்படும் முஸ்லிம் மக்களின் இறுதி தொழுகைக்காக கலாம் அவர்களின் உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவருடைய உடல் அவர்களுடைய முறைப்படி தூய்மைப்படுத்தப்பட்டு மேலே அவர்களுடைய புனித ஆடை போர்த்தப்பட்டு இறுதித் தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகை முடிவடைந்த பின்னர் கலாம் அவர்களின் புகழுடல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு இடையே பேக்கரும்பு கிராமத்திற்கு வந்தடைந்தது.

முன்னதாக அப்துல் கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பேக்கரும்பு பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநர் ரோசையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு, குலாம் நபி ஆசாத், தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உட்பட பல்வேறு மத்திய, மாநில தலைவர்கள் குவிந்திருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கலாம் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் கலாமின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மற்ற தலைவர்களுடன் வரிசையில் நின்று ராகுல் காந்தி கலாம் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். குலாம் நபி ஆசாத் மற்றும் ஷானவாஸ் ஹூசேன் ஆகியோர் கலாம் உடலுக்கு பாத்தியா ஓதி அஞ்சலி செலுத்தினர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஈவிகே எஸ் இளங்கோவன், தமிழிசை, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், வைகோ திருநாவுக்கரசர் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமராமல் வைகோ கலாம் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ADVERTISEMENT பின்னர் சரியாக 11.45 மணியளவில் முப்படைத் தளபதிகளின் முழு ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க கலாம் உடலுக்கு இறுதி ராணுவ மரியாதை செலுத்தியது.

பின்னர் அவரது உடலிலிருந்து தேசியக் கொடியானது 6 முப்படை வீரர்களால் மரியாதையுடன் நீக்கப்பட்டது. கலாமிற்கு புகழஞ்சலி செலுத்தும் மக்கள் கோஷங்கள் விண்ணப் பிளக்க சரியாக 12 மணியளவில் அந்த மக்கள் தலைவனின் உடல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கம் என்பதை விட ஒரு மகத்தான மக்கள் தலைவரின் உடல் அங்கு விதைக்கப்பட்டிருக்கின்றது. அடக்கம் செய்யப்பட்ட கலாமின் சமாதிக்கு, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுடைய முறையில் துவா ஓதி பிரார்த்தனை செய்தனர்.

மகத்தான மனிதரை மண்ணுக்குள் விதைத்திருக்கின்றோம் இன்று… இனி அவருடைய கனவுகளை விருட்சமாக்க வேண்டிய பொறுப்பு இளைய சமுதாயமான மாணவர்கள் கையில்!!!

Share.
Leave A Reply