பிரஜா உரிமை உள்ள நாட்டில் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதரவாளர்கள் மீது இன்று முற்பகல் 11.30 மணியளவில் இனந் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆதரவாளர்களை பார்வையிடச் சென்ற போதே இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவமானது மிகுந்த கவலையளிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாய் ஒருவரை கொலை செய்யுமளவிற்கு இவர்களை எந்த இனத்தில் சேர்க்க முடியும்.
அரசியலில் ஈடுபடுவது எமது பிரஜா உரிமையாகும். நாம் அரசியல் செய்யும் போது பொது மக்களும் வந்து அதில் கலந்து கொள்வார்கள். இதில் வெற்றி தோல்வியை ஏற்று கொள்ளும் மனநிலை வேண்டும்.
எப்போதும் ஒருவருக்கு வெற்றி கிடைத்து கொண்டு இருக்காது. ஒரு நாள் தோல்வியை தழுவலாம். இவ்வாறு தோல்வியை தாங்கி கொள்ள முடியாதவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடலாம். யாரும் மனிதரை கொலை செய்து பலவந்தமாக வெற்றிகொள்ள முடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பயணத்தை நாம் விட்டுகொடுக்க முடியாது.
இது மக்களின் விருப்பமாகும். பிரஜா உரிமை உள்ள நாட்டில் பலவந்தமாக ஆட்சியை கைப்பற்ற முடியாது. அதாவது துப்பாக்கி சூடுகளை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.