திருச்சி : சேர்ந்து வாழ அனுமதிக்காததால் சிறப்புமுகாமில் உள்ள ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து முதலமைச்சருக்கு மகேஸ்வரன் என்ற அந்த அகதி உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த 3 வருடங்களாக திருச்சியில் உள்ள முகாமில் தாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் தனது மனைவி தனியாக கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்ட போது நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி தொடர்ந்த வழக்கின் இறுதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியுடன் சேர்ந்து வாழ மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு கூறியும், அதனை “க்யூ” பிரிவு நிராகரித்து விட்டதாகவும் மகேஸ்வரன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு கைதியோ, குற்றவாளியோ அல்ல என்ற நிலையில் எங்காவது ஒரு இடத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு மனவியுடன் சேர்ந்து வாழ தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாகவும், 40 வயதுக்கு மேல் குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழ்வது தேவையில்லை என்பதால், தன்னிடம் இருந்து மனைவியை பிரிக்க அவரது உறவினர்கள் முயல்வதாகவும் மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருவரும் சாவதற்கு முடிவெடுத்ததாகவும், தங்கள் சாவுக்குப் பிறகாவது சிறப்பு முகாமின் உண்மை நிலை தெரியவரும் என்றும் மகேஸ்வரன் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி பிரஷாந்தி ஆகியோர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.