சிவகங்கை: ஆசிரியரின் உத்தரவுப்படி தன்னை விட எடை அதிகமான மாணவரை தோளில் தூக்கிக் கொண்டு ஓடியதால், கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு சிவகங்கை அருகே மாணவர் ஒருவர் படுத்த படுக்கையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை திருப்புவனம் அருகே டி.பாப்பான்குளத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது 15 வயது மகன் வினோத் ஸ்ரீராம், திருப்புவனம் காமராசர் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வட்டார அளவிலான தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் காமராசர் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
100மீ, 200மீ ஓட்டப் பந்தயத்தில் வினோத் தேர்வு செய்யப்பட்டு உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மதியம் 3 மணிக்கு பள்ளி வளாகத்தில் வினோத் சரிவர பயிற்சி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வினோத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் தண்டனை அளித்துள்ளார். அதாவது அதிக எடை கொண்ட சக மாணவர் ஒருவரை முதுகில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்பது தான் அது.
ஆனால், இந்த தண்டனைக்கு வினோத் மறுத்துள்ளார். ஆனால், ஆசிரியரின் வற்புறுத்தலால் தன்னை விட அதிக எடை கொண்ட சகமாணவர் ஒருவரை முதுகில் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார் வினோத்.
சிறிது தூரம் ஓடியதும் திடீரென வினோத் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக உடற்கல்வி ஆசிரியர் மற்றொருவரின் துணையோடு டூவீலரில் வினோத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதற்குள்ளாக தகவல் அறிந்து விரைந்து வந்த வினோத்தின் பெற்றோர் அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
அங்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் தன்னை விட அதிக எடை கொண்ட மாணவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடியதால் வினோத்தின் கழுத்து நரம்பு பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது.
இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால் ஒரு மாதம் கழித்து தான் வினோத் பழையபடி எழுந்து நடப்பாரா என்பது தெரிய வரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
துள்ளிக் குதித்து விளையாடி வந்த தங்களது மகன், கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் பேசக்கூட இயலாத நிலையில் படுத்த படுக்கையாக கிடப்பதைப் பார்த்து வினோத்தின் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை உடற்கல்வி ஆசிரியர், பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் மீது எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வினோத்தின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில்,”எனது மகன் மயங்கி விழுந்தவுடன் எங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை. பள்ளியில் அவ்வளவு வாகனம் இருந்தும் 3 கி.மீ., துாரம் டூவீலரில் மயங்கிய நிலையில் எனது மகனை கொண்டு போயுள்ளனர்.
கழுத்து நரம்பு பலவீனமடைந்த நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் எனது மகனை பார்த்து வேதனையில் துடித்து வருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவம் குறித்து உரிய விளக்கம் ஏதும் அளிக்காமல் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மௌனம் சாதித்து வருகிறது. பள்ளி வளாகத்தில் ஆசிரியரின் தண்டனையால் மாணவர் படுத்தப் படுக்கையாக இருக்கும் சம்பவம் பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.