இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும்.
7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக் குடைந்து வரையப்பட்டுள்ள அஜந்தா குகை ஓவியங்கள் நமது நாட்டின் பெருமைமிக்க பாரம்பரிய சின்னமாகும்.
பல நூற்றாண்டுகளாக இந்த அஜந்தா குகை ஓவியங்கள் மனிதர்களின் பார்வையில் படாமல் இருந்தன. 1819ஆம் ஆண்டில் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாயிலாகத்தான் இந்த புதையல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுதான் பிரிட்டிஷ் படையினர் நமது நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.
தற்போது உலகறிந்த இடமாக இருக்கும் அஜந்தாவை யுனெஸ்கோ அமைப்பும் உலக புராதான சின்னமாக அறிவித்துள்ளது.
கலைகளை ரசிக்கவும், ஓவியத்தையும், சிற்பங்களையும் கண்டு கண்களுக்கு விருந்தளிக்கவும் விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் இடம் அஜந்தாவாகத்தான் இருக்கும்.
மும்பையின் வடகிழக்குப் பக்கத்தில் ஹெளரங்காபாத்திற்கு அருகே அமைந்துள்ள அஜந்தா மலைப் பகுதியை ஒட்டி ஓடும் வகோரா ஆற்றை குதிரை லாயம் போன்று ஒரு பெரிய கல் தாங்கியிருப்பது அங்கு காணக்கூடிய அதிசயங்களுக்கெல்லாம் மற்றொரு அதிசயமாகும்.