எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற மனித உரிமைப்பேரவையின் போர்க்குற்ற அறிக்கை இன்றைய அரசியல் சூழலில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளி மாலை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களை சந்தித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையோடு ஐ.நா. மனித உரிமை அறிக்கை வெளிவரும் நிலையில் தேர்தலின் பின் பாரிய மாற்றமொன்றை நாம் காண்போம்.
அல்லற்பட்டு, துன்பப்பட்டு வாழும் வட கிழக்குப் பெண்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும். அந்த விடிவைக்காண த.தே.கூட்டமைப்பு கடுமையாக பாடுபடுமென்பதை மனந்திறந்து கூறுகின்றேன்.
காணாமற்போனோர் கடத்தப்பட்டோர், சிறையில் வாடும் இளைஞர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என்று வாழும் எம் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வை கண்டே தீருவோம்.
த.தே.கூட்டமைப்பு வடகிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றது. தமிழ் மக்களுடைய விசுவாசமான நம்பிக்கையைப் பெற்ற ஒரே ஒரு கட்சி ஜனநாயக அமைப்பாகவும் அது பேணப்படுகிறது.
வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை.
புதிய ஜனாதிபதி தற்பொழுது கூறி வருகிறார். நான் 5 வருடங்களுக்கு மேல் பதவியிலிருக்க மாட்டேன். எனது பதவிக்காலத்தில் இந்நாட்டின் முக்கியமான பிரச்சினையாக கருதப்படும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை எனது பதவிக்காலத்தில் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற மனித உரிமைப் பேரவையின் அறிக்கை இன்றைய அரசியல் சூழலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமென்று நினைக்கின்றோம்.
தற்பொழுது புதிய அரசாங்கம் தனது அணுகு முறையை முழுமையாக மாற்றியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசு சர்வதேசத்தை எதிர்த்து நடந்து வந்தது.
விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோமென்றார்கள். ஆனால் புதிய அரசாங்கத்தில் மாற்றமொன்றை எம்மால் காண முடிகிறது.
இருந்த போதிலும் சர்வதேச விசாரணையின் அறிக்கை வெளிவர வேண்டும். உண்மை நிலை நாட்டப்பட வேண்டும். அந்த உண்மை இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் தெரிய வேண்டும்.
குறிப்பாக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு தெரியவர வேண்டும். அந்த உண்மையின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு ஏற்பட வேண்டும். நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும்.
அதன் மூலம் இனிமேல் இந்நாட்டில் இவ்விதமான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என த.தே. கூ. எதிர்பார்க்கிறது. இதன் மூலமே புரிந்துணர்வு நல்லிணக்கம் ஏற்படலாமென்பது எமது தெளிவான கருத்தாகும்.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அண்மையில் ஒரு கருத்தைத்தெரிவித்திருந்தார். த.தே.கூ. அமைப்பின் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவாறு இணைந்த வடகிழக்கில் முறையான சுயாட்சி ஏற்படுவதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்று இக்கூற்று முஸ்லிம் மக்களுடைய சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றன என்பதை அவதானிக்க முடிகிறது அதை உதாசீனம் செய்ய முடியாது.
(திருமலை நவம்)