தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்டக்கூடாது. இவ்வாறான பிரசாரங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக் கூடும்.
மேலும் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான வடக்கு,கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையில் புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமும் முழுமையாக புறந்தள்ளப்பட வேண்டும் என்று சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.
இன,மத ரீதியாக அரசியல் செய்வது நாட்டிற்கு செய்யும் பாரிய துரோகமாகும். இவ்வாறான அரசியல் கட்சிகளை இரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்டங்களை அடுத்த பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றவேண்டும் என்றும் பேரவை வேண்டுகோள் விடுத்தது.
தேர்தல் முறைமையை மையமாக கொண்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் மோசடிக்கார்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பொறுப்பினை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்றும் அந்த பேரவை குறிப்பிட்டது.
கொழும்பிலுள்ள புத்திஜீவிகள் சங்க கேட்போர் கூடத்தில் நேற்று நடைப்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே சர்வமத பேரவை சார்பாக கலந்து கொண்ட மததலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இத்தேபான தம்மாலங்கார மகாநாயக்க தேரர், பெல்லன்வில விமலரத்ன தேரர், பெஸிஸ் ஜோசப் ஆண்டகை மற்றும் அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் ஊடக பேச்சாளர் மெலளவி பாசில் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்துத் தெரிவிக்கையில்,
மோசடிக்காரர்களை கொண்ட பாராளுமன்ற முறைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. கடந்த பாராளுமன்றத்தின் போது தேர்தல் முறைமையை மையமாக கொண்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
எனினும் குறித்த திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஏன் குறித்த சட்டம் நிறைவேற்றாமல் பின்தள்ளப்பட்டது என்பது தெரியவில்லை.
கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையோர் என மோசடிக்கார்களே கடந்த பாராளுமன்றங்களில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். இதன்காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது.
இந்த விடயத்தில் ஒரு கட்சியினரை மாத்திரம் குற்றம்சுமத்த முடியாது. மோசடிக்கார்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு ஏதோ ஒரு வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்தாசை வழங்கியுள்ளன.
ஆகவே இந்த விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பு கூறவேண்டும். தற்போதைய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் அப்போதைய எதிர்கட்சிகள் அமைதியாக இருந்தன. எனவே ஒரு தரப்பினரை மாத்திரம் குற்றம்சுமத்த முடியாது.
இந்நிலையில் தேர்தல் முறைமை மாற்றத்தை அடிப்படையாக கொண்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். 1972 மற்றும் 1978 ஆகிய காலப்பகுதிகளின் போது புதிய அரசியல் யாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் குறித்த அரசியல் யாப்புகள் அனைத்தும் தனது கட்சியின் சுய நலனை கருத்திற் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் நாட்டின் கலாசாரத்தை மீறி செயற்படாத வகையிலான புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
இலஞ்ச, ஊழல் உள்ளிட்ட மோசடிக்காரக்ளை தெரிவு செய்யும் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். புத்திஜீவிகளையும் சிறந்தோரையும் நாட்டு மக்கள் தெரிவு செய்யவேண்டும்.
இதேவேளை இனவாத அரசியல் முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும். இன,மத ரீதியாக அரசியலில் ஈடுப்படுவதனை முற்றாக நீக்க வேண்டும் இன, மத ரீதியாக அரசியலில் ஈடுப்படுவது நாட்டிற்கு செய்யும் பாரிய துரோகமாகும். இந்த விடயத்திலிருந்து அனைத்து மத தலைவர்களும் ஒதுங்கியிருக்க வேண்டும்.
மேலும் வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையில் புதிய பாராளுமன்றம் தோற்றுவிக்கப்பட வேண்டும். யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன துயரங்களை ஆற்ற வேண்டும்.
பிரிவினைவாதத்தை மேலோங்க செய்வதன் மூலம் நாட்டை மேம்படுத்த முடியாது. அத்தோடு பெரும்பான்மை மற்றும் சிறுப்பான்மை என்ற பேதங்களை ஏற்படுத்தாமல் நாட்டை முன்னேற்றும் வகையிலான புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவே தற்போது தேர்தல் நெருங்கியுள்ள இத்தறுவாயில் அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் சிறந்தோரை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த இத்தேபான தம்மாலங்கார மகாநாயக்க தேரர்,
இம்முறை பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றது. யாரும் எதிர்பார்திராத வகையில் வரலாற்றில் முதற்தடவை இவ்வாறானதொரு தேர்தல் நடத்தப்படுகிறது. இதே வழிமுறையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும். மோசடிக்கார்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு இடமளிக்க போவதில்லை.
இந்த முறை தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இது மிகவும் சிறந்ததொரு வாய்ப்பாகும். இதனை எக்காரணம் கொண்டும் கைவிட கூடாது. எந்த கட்சியினரானாலும் கவலையில்லை.
புத்திஜீவிகள், நேர்மையானோர் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்காக மக்களை அறிவுறுத்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரசாரங்களில் இனவாதம் முற்றாக ஒழித்துக் கட்டவேண்டும். இனவாதத்தை கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். இன,மத ரீதியான அரசியல் கட்சிகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்டங்களை அடுத்த பாராளுமன்றத்திற்கு கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த மௌலவி அஷ்ஷேக் பாசில் பாரூக்
புனித அல்குர்ஆனினதும் முஹம்மத் நபிகளாரின் போதனைகளின் பிரகாரம் நாட்டை ஆட்சி செய்வதற்கு தகைமையுடையோரை தெரிவு செய்ய வேண்டும். நேர்மை, திறமை உள்ளிட்ட சிறந்தோரை இம்முறை பாராளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
மேலும் அமைதியானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டை ஆட்சி செய்வதற்கு வருகை தரகூடியவர்கள் மக்களுக்கு சேவை செய்வதனை பிரதான இலக்காக கொண்டே வரவேண்டும்.
மேலும் இந்த விடயத்தில் ஊடகம் ஒழுங்கு முறைப்படி செயற்படவேண்டும் என்றார்.