காணாமல்போன மலேசிய எம்.எச். 370 விமானம் தொடர்பான மர்மம் தீரும் தருணம் நெருங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அப்பொட் தெரிவித்துள்ளார்.
றீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு காணாமல்போன விமானத்தின் பாகம் என மலேசியா அறிவித்ததையடுத்தே ரோனி அப்பொட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி சிதைவை பரிசோதித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள் அது குறிப்பிட்ட விமானத்தின் பாகம் என்பதை முடிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் கூறினார்.
எனினும் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு காணாமல்போன விமானத்துக்குரியது என உறுதிப்படுத்தாத போதும், அது அந்த விமானத்தின் பாகமாகவே பெருமளவிற்கு தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தாம் சரியான இடத்திலேயே காணாமல்போன விமானத்தைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அவுஸ்திரேலியா கூறுகிறது.
மலேசிய எயார்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 விமானம் கடந்த வருடம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை காணாமல் போனது.
அந்த விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் கடந்த வாரம் இந்து சமுத்திரத்திலுள்ள பிரான்ஸ் தீவான றீயூனியனில் மேற்படி விமானத்தினது என சந்தேகிக்கப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரு சிதைவு விமானமொன்றினது சிதைவு என அடையாளம் காணப்பட்டதையடுத்துஅது பரிசோதனைக்காக பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டது.
றீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு காணாமல்போன விமானத்தின் பாகம் என மலேசிய பிரதமர் அறிவித்ததையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த சீனப் பயணிகளின் உறவினர்கள் மேற்படி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சீனாவின் பீஜிங் நகரிலுள்ள மலேசிய எயார்லைன்ஸ் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் விமானம் தொடர்பான மேற்படி தகவலை தம்மால் நம்பமுடியாதுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு மேலதிக விளக்கம் தேவையாகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.