லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 600 குடியேற்றவாசிகளுடன் புதன்கிழமை மூழ்கிய படகொன்றில் பயணித்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்படி படகு லிபிய கடற்கரையிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் மூழ்கியிருந்தது.
ஆரம்பத்தில் அந்தப் படகில் பயணித்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்பட்டது. எனினும் அவர்களில் சுமார் 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் பின்னர் தெரிவித்தது.
இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பலர் காணாமல்போயுள்ளதாகவும் இத்தாலிய கரையோர காவல் படையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கு செல்லும் முயற்சியின் போது 2,000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர்.