துபாயில் வசிக்கும் ஆசிய இனத்தைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சமீபத்தில் ரம்மியமான துபாய் கடற்கரையில் மாலைப் பொழுதை கழிக்க விரும்பி, தனது குடும்பத்துடன் பிக்னிக் சென்றிருந்தார்.
கடல் அலைகளுக்கு இடையே குழந்தைகள் நீந்தி விளையாடும் அழகை அவர் தூரத்தில் இருந்து இரசித்துக் கொண்டிருந்தபோது, வேகமாக எழும்பிவந்த ஒரு இராட்சத பேரலை அவரது இருபது வயது மகளை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதை கடற்கரையோரம் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த துபாய் அரசின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையை சேர்ந்த இரு காவலர்கள் கவனித்து விட்டனர்.
அந்த இளம்பெண்ணை காப்பாற்ற அவர்கள் விரைந்து சென்றனர். ஆனால், அவர்களை ஆறடிக்கும் மேலே வளர்ந்திருந்த ஆஜானுபாகுவான ஒரு உருவம் தடுத்தது.
தனது மகளின் உடலின்மீது அன்னிய ஆடவர்களின் கரம் பட்டால் அவள் களங்கப்பட்டு விடுவாள் என நம்பிய அந்த தந்தை, மீட்புப் படை வீரர்கள் தங்களது கடமையை செய்ய விடாமல் தடுத்து, அவர்களை இழுத்துப் பிடித்து, தாக்க தொடங்கினார்.
அவரிடம் மல்லுக்கடி, கீழே தள்ளிவிட்டு கடலுக்குள் பாய்ந்த பாதுகாப்புப் படையினர் அந்த இளம்பெண்ணை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கொடுமையை நான் பார்த்ததே இல்லை என துபாய் பொலிஸ் துறையின் லெப்டினண்ட் ஜெனரல் அகமது புர்க்கிபா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.