அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அல்லது தேசிய காங்கிரஸின் வாக்குகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரஸ் தலைவரும் ஐ.ம.சு.மு.வின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கும் அரசியலானது முஸ்லிம்களுக்கு ஆபத்தை கொண்டுவரும் என்று குறிப்பிட்டார்.
அவர் வழங்கிய நேர்காணலின் முழுவிபரம் வருமாறு
களியோடை பாலத்திற்கு ஒரு பக்கமாக உள்ள ஊர்களைச் சேர்ந்த வேட்பாளர்களையே உங்கள் கட்சி சார்பில் களமிறக்கியுள்ளீர்கள். இது என்ன வியூகம்?
தலைவர் அஷ்ரஃப்பினுடைய காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் 3 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற வேண்டும் என்பதற்கான வியூகங்களை அமைத்து தொடர்ச்சியாக வெற்றி கண்டிருக்கின்றோம்.
கடந்த முறையும் அவ்வாறே செய்தோம். ஆனால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எமது வேட்பாளர்கள் தோற்றுப் போனார்கள்.
இம்முறை 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவே திட்டமிட்டிருந்தோம். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் அவர்களது வேட்பாளர்கள் மூவரும் களியோடை பாலத்திற்கு வடக்கு புறமாக நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை ஆகிய ஊர்களில் போடப்போவது எமக்கு உறுதியாக தெரிந்தமையால், களியோடைக்கு தென் புறமாக உள்ள அதிகமான ஊர்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது.
வேட்பாளர் நியமனத்தில் இவ்வூர்கள் கைவிடப்பட்டதால் தமக்கு எம்.பி. கிடைக்காது என்ற அங்கலாய்ப்புக்கு இப்பிரதேச மக்கள் ஆட்பட்டதோடு யாருக்கு வாக்களிப்பது என்ற தடுமாற்றமும் ஏற்பட்டது.
எனவேதான் அம்மக்களை கருத்திற் கொண்டு, அரசியல் அதிகாரமற்று இருக்கின்ற ஊர்களில் வேட்பாளர்களை நிறுத்தினோம். இந்த வியூகம் வெற்றி பெறும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறி கடந்த தேர்தலில் அவரை ஆதரித்தீர்கள். இப்போது அந்த நன்றிக்கடன் முடிந்து விட்டதா?
மஹிந்த ராஜபக் ஷவின் மீது முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருந்த சூழ்நிலையிலும் கூட, யுத்தம், வடக்கு, -கிழக்கு பிரிப்பு, பயங்கரவாத அழிவுகள் போன்ற அனுபவங்களை கருத்திற் கொண்டும் அவற்றுக்கெல்லாம் தீர்வைப் பெற்றுத்தந்தார் என்பதற்காகவுமே அவரோடு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வென்றதும் எமது கடமை முடிந்து விட்டது. மக்கள் மாறி வாக்களித்திருந்த வேளையிலும் நாம் செலுத்திய நன்றிக்கடன் போதுமென நினைக்கின்றேன்.
அப்படியென்றால் அவரை ஆதரிக்கும் தீர்மானம் பிழை என்றுதானே அர்த்தம்?
இல்லை. அப்படியில்லை. அந்த தீர்மானம் சரியானதே. நாம் இருந்த இடத்திலேயே இருக்க தலைவர்களே மாறியிருக்கின்றார்கள்.
ஐ.ம.சு.மு.வை சந்திரிகா உருவாக்கினார், பின்னர் மஹிந்த அதற்கு தலைமை தாங்கினார், இப்போது மைத்திரி தலைவராகி இருக்கின்றார். நாம் மைத்திரிபாலவுக்கு வாக்களிக்கச் சொல்லாவிட்டாலும் மக்கள் அவருக்கு வாக்களித்ததன் மூலம் அவர் வெற்றியடைந்தார்.
இந்நிலையில் நாம் இருந்த இடத்திலேயே இருக்க வெளியேறிச் சென்ற மைத்திரிபால மீண்டும் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் வந்து இணைந்திருக்கின்றார். இன்று நாம் எல்லோரும் ஓரணியில் இருப்பது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஏன் உங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கவில்லை?
தனித்து போட்டியிட்டு 80 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை நாம் பெற்றாலும் ஒரு ஆசனத்தையே பெறலாம். இரு ஆசனங்களை பெறுவது சிரமமாக இருக்கும்.
எனவேதான் எமது வாக்கு வங்கியின் மூலம் ஒரு ஆசனத்தை பெறுவதை தவிர்த்து தெரிவு வாக்குகளின் மூலம் 3 ஆசனங்களை பெறுவதற்காக, பெரிய வாக்கு வங்கியுள்ள ஐ.ம,சு.மு.வுடன் ஒன்றிணைந்துள்ளோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் திடீரென களமிறங்கியதால் உங்களது வாக்குவங்கியில் சிறு சரிவு ஏற்பட்டிருக்கின்றதா?
ஒரு குறைவும் எமக்கு இருக்காது. மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் கால்பதித்துள்ளது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக அல்ல.
வன்னியில் ரிசாத்தையும், மட்டக்களப்பில் அமீர்அலியையும் தோற்கடிக்கும் நோக்கத்தை முதன்மைப்படுத்தியே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது.
இந்த சூழ்நிலையிலே வன்னியில் தனக்கு வைக்கப்பட்ட ஆப்புக்கு, பதில்ஆப்பு வைப்பதற்காகவே ரிசாத் அம்பாறையில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தார். இது ஐ.ம.சு.மு.வின் வெற்றிபற்றிய நம்பிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளதே தவிர, வாக்குகள் குறையவில்லை.
எல்லா முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து, முக்கிய சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் சம்மதிப்பீர்களா?
இந்த விடயம் முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட வேண்டும். தலைவர் அஷ்ரஃப் இருக்கின்ற போது அவர் சமூகம் பற்றி சிந்தித்து இதயசுத்தியுடன் செயற்பட்டதால் அவருக்கு பின்னால் எல்லோரும் அணிதிரள வேண்டிய நிலைமை இருந்தது.
ஆனால் அவருடன் மறைவுக்கு பின்னர், வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் எல்லா முட்டைகளையும் ஒரு கூடையில் போடுவது புத்திசாலித்தனமல்ல.
இதனை மூத்த தலைவர்கள் பலர் காட்டித்தந்திருக்கின்றார்கள். முட்டைகளை பாதுகாப்பது என்றால் பல கூடைகளில் போட வேண்டும் என சொல்லியிருக்கின்றார்கள்.
இன்றிருக்கும் சூழலில் எல்லோரும் ஓரணியில், ஒன்றை நம்பி போகின்றபோது அங்கு தலைமை கொடுக்கின்றவர் எடுக்கின்ற தீர்மானம் பிழையாக இருந்துவிட்டால் முழு முஸ்லிம் சமுதாயமும் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அதுமட்டுமன்றி, இரண்டு பெரும்பான்மை கட்சிகளில் ஒன்றே இந்தநாட்டை ஆளும் என்ற அடிப்படையில், ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் தரப்பிலும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ளது.
சிலவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் 2 இலட்சம் வாக்குகளை அதிகமாக வழங்கி மஹிந்த வெற்றி பெற்றிருந்தால், முஸ்லிம்களின் சார்பாக அவரது அரசாங்கத்தில் யார் இருந்திருப்பார்கள்?
என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். எனவேதான் பல கட்சிகள் பல பக்கத்திலும் இருப்பதன் மூலம் ஏதோ ஒரு வகையில் சரியான கருத்துக்களையும் பிழையான கருத்துக்களையும் மக்கள் எடைபோட்டு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஒன்று சேர்கின்ற போது பிழையான தீர்மானத்தை எல்லோரும் எடுத்தால் எல்லா முட்டைகளும் உடைந்துவிடும்.