நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் ஒன்றினை மஹிந்த ராஜபக்ஷ இன்று அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன்னர் மக்கள் ஆணைக்கு அமைவாக நான் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினேன்.
அத்துடன் சில தினங்களுக்குப் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தது உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானமாகும்.
நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்
14-08-2015
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இதுவரை பிரதமர் பதவி வழங்கப்படாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவி வழங்கப்படுவது அவசியமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதுவரை பிரதமர் பதவியைப் பெறாத மூத்த உறுப்பினருக்கே பிரதமர் பதவி என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
அதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதற்காகத் தான் முன்னின்று செயல்படத் தீர்மானித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் கூறியிருக்கும் சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததால், இந்தத் தீர்மானத்தைத் தான் கைவிட்டதாக கூறியிருக்கிறார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவே தான் இவ்வாறு பின்வாங்கியதாக கூறியுள்ள ஜனாதிபதி சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்திருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனக்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மஹிந்த தேர்தல் களத்தில் இருப்பதால் தமிழ், இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் பெற முடியாத நிலை எற்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் விருப்பத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிசேன கூறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பு 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டினால் பிரதமர் பதவியை இதுவரை வகிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினருக்கு வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாமென மஹிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சிறிசேன கோரியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, எ.எச்.எம். பவுசி , அத்தாவுத செனிவிரத்ன, சமல் ராஜபக்ஷ, சுசில் பிரேம ஜயந்த, அனுரா பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூத்த தலைவர்கள் இருக்கின்றனர்.
எதிர் வரும் தினங்களில் இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.