வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு மின்னேரியா முகாமில் இடப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக் ஷ இன்று எதுவுமே தெரியாதது போல் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறார். ஹிட்லரின் ஆட்சியை புத்தகத்தில் படித்துள்ளோம். மஹிந்த அவரது சகோதரர்களான கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகியோர் ஒரு புறத்தில் திருடினார்கள்.

மறுபுறத்தில் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது கதைத்தல் எழுதுதல் உட்பட சகல உரிமைகளையும் பறித்துக்கொண்டார்கள்.

அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதினால் அவர்களை கடத்தி மின்னேரியா முகாமில் ஒப்படைப்பார்கள். இதற்கு நான் இராணுவத்தை குறை கூறவில்லை. மேஜர் திஸ்ஸ என்பவரையே அவர்கள் இதற்காக தேர்ந்தெடுத்திருந்தனர்.

மேலும் எனது மகனை தாக்குவதற்கு திஸ்ஸவை கொண்டு வந்தது. ஜனாதிபதி மாளிகை வாகனம் அதேபோன்று வஸீம் தாஜூதீனுக்கும் வந்தது.

ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான வாகனம் என்னுடைய மகனை கடத்தி கொலைசெய்ய முற்பட்டனர். என்றாலும் எனது மகன் அவர்களை தாக்கிவிட்டு தப்பி வந்தார்.

தாஜூதீனும் எனது மகனும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். காதல் முரண்பாட்டினால் தான் தாஜூதீன் கொலை செய்யப்பட்டார்.

அதாவது யோசித்த ராஜபக் ஷ காதலித்து வந்த பெண் பிள்ளையும் தாஜூதீனுடன் நண்பர்களாக பழகி வந்தனர் இவர்களது நட்பில் ஏற்பட்ட சந்தேகத்திலே திஸ்ஸவை வாடகைக்கு அழைத்து வந்து தாஜூதீனை கொலை செய்தனர்.

எனவே தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகனின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும். மஹிந்த ராஜபக் ஷ இன்னும் ஐந்து வருடங்கள் இருந்திருந்தால் நாடு அழிந்திருக்கும் என்றார்.

Share.
Leave A Reply