பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன ஒரு ஊடகவியலாளர். ராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்ட எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என இன்னும் தெரியவில்லை.
கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் நீடிக்கும் எக்னெலிகொட தொடர்பில் 2010 முதல் விசாரணைகள் இடம்பெற்று வரும் போதும் இது வரை அவருக்கு என்ன நடந்தது என எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் கடந்த 5 வருடங்களாக இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹவத்த ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது வரையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் இரணுவ புலனாய்வாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள இருவரால் இராஜகிரியவில் வைத்து எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டுள்ளதும் பின்னர் கிரித்தல இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
பிரகீத் எக்னெலிகொட ஏன் கடத்தப்பட்டார்?, யாரால் கடத்தப்பட்டார்? போன்ற கேள்விகளுக்கு இந்த விசாரணைகளில் கிட்டத்தட்ட பதில் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உள்ளக தகவல்கள், அவர் தற்போது எங்கு உள்ளார்?, உயிருடன் உள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டு விட்டாரா போன்ற கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கும் என நம்புகின்றனர்.
உண்மையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் இரு தமிழ் இளைஞர்களைக் கைது செய்தனர்.
அவர்கள் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விடுபட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள்.
அவர்களை நாம் ரமேஷ், மகேஷ் என்ற மாற்று பெயர்களில் அடையாளப்படுத்துகின்றோம். எக்னெலிகொட தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் விசாரணைகளை பாதிக்காத வண்ணம் மேலும் சில தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அதன்படி, 2010 ஜனவரி 24 ஆம் திகதியன்று ராஜகிரிய பகுதியில் வைத்து பிரகீத் எக்னெலிகொடவை ரமேஷும் மகேஷும் சேர்ந்தே கடத்தியுள்ளனர்.
இவ்வாறு தாம் கடத்திய எக்னெலிகொடவை அவர்கள் வட மத்திய மாகாணத்தின் சிறப்பு இராணுவ முகாம்களில் ஒன்றான கிரிதல முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் கிரிதல இராணுவ முகாமில் சுமார் 20 இராணுவ புலனாய்வாளர்கள் சேவையில் இருந்துள்ளனர்.
அவர்களில் இருவரான ரமேஷும் மகேஷுமே இந்த கடத்தலை செய்துள்ளமை புலனாய்வுப் பிரிவினரின் அறிவியல் தடயங்களை மையப்படுத்திய விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தலை செய்ததாக நம்பப்படும் இரு புலனாய்வாளர்களும் தனியார் தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்தியுள்ள தொலைபேசியின் எமி இலக்கமானது பதிவு செய்யப்படாதது என தெரியவந்துள்ளது.
வெள்ளை வேன் கடத்தல்கள் பல தொடர்பில் இவ்வாறான எமி இலக்கம் பதிவாகாத தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உண்மையில் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் முதல் முறைப்பாடு ஹோமாகமை பொலிஸாருக்கே கிடைத்திருந்தது.
எக்னெலிகொடவின் மனைவி இந்த முறைப்பாட்டினை செய்திருந்தார். இந் நிலையில் இது தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு, ஹோமாகமை பொலிஸ் நிலையத்தின் தகவல் புத்தகத்தையும் முறைப்பாட்டு புத்தகத்தையும் முதலில் பரிசோதித்துள்ளது.
இதன் போது எக்னெலிகொட தொடர்பான முறைப்பாடு மற்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்ட இரு தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் உள்ளிட்ட தாள்கள் கிழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இரு தாள்கள் இவ்வாறு கிழித்தெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தான் 2010 ஜனாதிபதி தேர்தலில் அப்போது பொது வேட்பாளராக இருந்தவருக்கு பிரகீத் எக்னெலிகொட ஆதரவளித்தார் என்ற ரீதியில் காலியை சேர்ந்த கவி வரிகளை எழுதும் ஒரு கலைஞருடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் இதன் போது எக்னெலிகொடவை குறித்த கலைஞர் அச்சுறுத்தும் பாணியில் திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே எக்னெலிகொட மாயமானார்.
இந் நிலையில் குறித்த கலைஞர் தற்போது தலைமறைவு வாழ்க்கை ஒன்றினை வாழ்வதாக கூறும் பொலிஸார் அவருடன் கடத்தலுக்கு வந்த ரமேஷும் மகேஷும் கொண்டிருந்த தொடர்பு குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
ரமேஷும் மஹேஷும் சேர்ந்து எக்னெலிகொடவை கடத்திக் கொண்டு நேராக கிரித்தல முகாமுக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் அப்போதே 077 037XXXX என்ற இலக்கத்தை மையப்படுத்தி மிரிஹான பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள போதும் அது தொடர்பில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ரமேஷ், மஹேஷ் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பிரகாரம், எக்னெலி கொட கிரித்தல முகாமில் வைத்து தமது மேலதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
எவ்வாறாயினும் கிரித்தல முகாமில் ஒப்படைக்கப்பட்ட எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதே தற்போது கேள்விக் குறியாக உள்ளது.
குறிப்பாக புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல் ஒன்றின் படி, எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும் அந்த தகவல் எந்தளவு தூரம் நம்பகரமானது என புலனாய்வுப் பிரிவினர் ஆராய்கின்றனர். எனவே எக்னெலிகொட கொலை செய்யப்பட்டுவிட்டதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியாமல் உள்ளது.
இந் நிலையில் தான் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் தொடர்பில் பிரதான நபராக கருதப்படும் இராணுவத்திலிருந்து தற்போது ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் ரண் பண்டா என அறியப்படும் நபர் கைதாகியுள்ளார்.
குருணாகலுக்கு சென்ற விசேட பொலிஸ் குழு அவரை சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரித்து வருகின்றது.
இதன் போது எக்னெலிகொட விவகாரம் தொடர்பில் பல தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெளிப்படுத்த முடிந்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்களின் பிரகாரம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கிரித்தல முகாமுக்கு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் அந்த முகாமில் மட்டும் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதாக குறித்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதனை விட தடுத்து வைக்கப்பட்ட குறித்த மூன்று நாட்களில் அவர் எழுதியதாக கூறப்படும் புத்தகம் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதாகவும் அந்த இராணுவ அதிகாரி விசரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரமேஷ், மஹேஷ் ஆகியோர் கடத்தி வந்த எக்னெலிகொடவை இவ்வாறு தானே தடுப்பில் வைத்து விசாரணை செய்ததாக அந்த இராணுவ சார்ஜன்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளருக்கும் எக்னெலிகொடவுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் குடும்ப விருட்சகம் என்ற பெயரில் பதிப்புக்கு தயாராக இருந்த எக்னெலிகொடவின் புத்தகம் ஆகியவை தொடர்பிலேயே இந்த மூன்று நாட்களும் தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
இந் நிலையில் தான் விசாரணை செய்து வந்த எக்னெலிகொடவை, முகாமின் இரண்டாவது கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அதிகாரி வந்து ‘ இவருடன் ஒரு பயணம் செல்ல வேண்டி உள்ளது’ எனக் கூறி அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் சார்ஜன்ட் மேஜர் தனது வாக்கு மூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எக்னெலிகொட கடத்தல் விவகாரம் இடம்பெற்ற காலப்பகுதியில் கிரிதல முகாமின் கட்டளை தளபதியாக இருந்தவர் கேர்ணல் தர அதிகாரி ஒருவராவார்.
இந் நிலையில் மேஜர் தர நிலையில் இருந்த இரண்டாம் தர நிலை கட்டளை அதிகாரியே எக்னெலிகொடவை அழைத்துச் சென்றுள்ளார்.
(இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கின்றோம்) இந் நிலையில் கட்டளை தளபதியின் உத்தரவுக்கு அமையவே, இரண்டாம் தர கட்டளை அதிகாரி செயற்பட்டிருக்க வேண்டும்.
இவ்விரு அதிகாரிகளும் எக்னெலிகொட விவகாரத்தில் கண்டிப்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர் என புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களை விசாரணை செய்வது குறித்து தற்போது புலனாய்வுப் பிரிவு விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நாளை மறுதினம் நடை பெறும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இவ்விரு இராணுவ அதிகாரிகளையும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள் என தெரிகின்றது.
ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டமை தொடர்பிலும் அதற்கன காரணமும் கிட்டத்தட்ட புலனாய்வுப் பிரிவினரால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய இராணுவ அதிகாரிகள் இருவரையும் விசாரணைசெய்வதில் புலனாய்வுப் பிரிவினர் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தின் உயர் மட்டம் அவர்களை காக்க நினைப்பதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்கக் கோரி எக்னெலிகொடவின் மனைவியும் பிள்ளைகளும் நேற்று முன்தினம் பொலிஸ் தலைமையகத்துக்கு கடிதம் ஒன்றினையும் சமர்ப்பித்திருந்தனர்.
இந் நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் மிக விரைவில் அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் எனவும் மர்மம் துலங்கும் எனவும் நம்புவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
எனவே 5 ஆண்டுகளாக மரணித்து இருந்த விசாரணைகள் தற்போது உயிர்ப்படைந்துள்ள நிலையில் விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு, ஊடகவியலாளர் பிரகீத்துக்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் வெளிப்படுத்துவதுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எக்னெலிகொடவின் குடும்பத்தார் மற்றும் ஊடக நண்பர்களின் எதிர்பார்ப்பாகும்.
-எப்.எம்.பஸீர்-