இந்தோனேஷியாவில் நேற்று முன்தினம் 54 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய “திரிகானா எயார் சேர்விஸ் விமானத்தில் சுமார் 6.1 கோடி ரூபா பெறுமதியான பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் திரிகானா எயார் சேர்விஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் 267 விமானம், இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தின் சேன்டானி நகரிலிருந்து ஒக்ஸிபில் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தது.
பின்னர் பேகுநுகன் மாவட்டத்தின் டாங்கோக் மலைப்பகுதியில், இவ்விமானத்தின் சிதைவுகள் கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
அவ்விமானத்திலிருந்து 49 பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஐவரில் எவரும் உயிர்தப்பியதாக தகவல் இல்லை.
விமானம் வீழ்ந்த பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டதாக இந்தோனேஷிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
இதேவேளை, இவ்விமானத்தில் 6.5 பில்லியன் இந்தோனேஷிய ரூபியா பணம் எடுத்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் தபால் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
மலைப்பகுதியில் வசிக்கும் வறிய மக்களுக்கு விநியோகிப்பததற்காக தபால் அதிகாரிகளால் இப்பணம் கொண்டு செல்லப்பட்டதாக தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புப்பாவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவிலுள்ள தபால் அலுவலகத்தின் தலைவர் ஹர்யோனோ இது தொடர்பாக கூறும்போது, “அந்தப் பணம் மொத்தமும் 4 பைகளில் கொண்டுவரப்பட்டது.
அப்பணப்பைகளுடன் எமது அதிகாரிகள் நால்வர் சென்றிருந்தனர்” எனக் கூறினார்.
இவ்விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்கள் இருந்த வேளையில், மலையில் மோதியுள்ளதாகவும் விமானம் மலையில் மோதியதை கிராமவாசிகள் கண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.