யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்கு மீள எண்ணும் கோரிக்கையொன்று நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டபோது அது மேலதிக தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. ஆறு வாக்குகளால் தமக்கு கிடைக்க வேண்டிய ஆறு ஆசனங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்தே இந்தக் கோரிக்கை கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து தெரியவருவதாவது,
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 இலட்சத்து 7ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்றிருந்தது.
அதேநேரம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 15 ஆயிரத்து 22 வாக்குகளைப் பெற்றிருந்தது. கட்சியொன்று பெறவேண்டிய 5 சதவீத வாக்குகளின் எண்ணிக்கையிலும் 6 வாக்குகளையே அதிகமாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பெற்றிருந்தது.
இதில் சந்தேகம் இருப்பதாக தமது அதிருப்தியை வெ ளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீள வாக்கு எண்ணும் கோரிக்கையை முன்வைத்தனர்.
எனினும் அக்கோரிக்கை மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்டினால் நிராகரிக்கப்பட்டதோடு அதற்குரிய தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டன.
குறிப்பாக குறித்த ஐயப்பாடு தொடர்பில் வாக்கு எண்ணும் தருணத்தில் அல்லது வாக்கு எண்ணி நிறைவடைந்த தருணத்தில் அதனை உரிய வாக்கெண்ணும் நிலையங்களில் கட்சி சார்பான முகவர்கள் அதனை முன் வைத்திருக்கவேண்டும்.
அச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அக்கோரிக்கையை முன்வைப்பதானது பொருத்தமற்றது. அத்துடன் அதற்கு தேர்தல்கள் சட்டத்திலும் இடமளிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
தனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எழுத்து மூலமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
குறிப்பாக 6 வாக்குகள் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் குறைவாகப் பெற்றிருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு 6 ஆசனங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வாக்குகள் குறைவாக பெற்ற வித்தியாசத்தில் ஒரு ஆசனத்தை யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
கூட்டமைப்புக்கு ஆறு ஆசனங்கள் கிடைத்திருந்தால், விஜயகலா மகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் – இரா.சம்பந்தன் உறுதி
19-08-2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,’ வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உலகறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள்.
தமிழ் மக்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் பார்க்க சற்று குறைவாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு, கிழக்கு மக்கள் தமது நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இத்தேர்தலில் தெரிவு செய்திருக்கிறார்கள். இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை.
துரதிஷ்டவசமாக தேர்தலுக்கு முன்பாக சில விசமத்தனமான பரப்புரைகள் எம்மீது மேற்கொள்ளப்பட்டன. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அரசியல் தீர்வு விடயத்தில் காலதாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.
இது விடயம் குறித்து எடுக்க வேண்டிய முயற்சிகளை இனி வேகமாக மேற்கொள்வோம்.
எம்மைப் பொறுத்தவரையில் அதிபர் தேர்தலில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இருக்க வேண்டும்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தொடரும் வகையில் அமையவிருக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்விதமான நிலைமைக்கு நாங்கள் ஆதரவாக இரும்.
அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்க்கமான ஒரு அரசியல்தீர்வை கொண்டு வருவதற்கு கடுமையான காத்திரமான முயற்சிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்று பாரிய சாதனை படைத்திருக்கின்ற போதும், 6 ஆசனங்களை பெறுவதற்குரிய வாய்ப்பை மிக மிக சொற்பளவு வாக்கான 6 வாக்குகளால் இழந்துள்ளது என்பது கவலை தருகின்ற விடயமாகும்.
நாம் இவ் விடயம் சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளோம். சிறு கட்சிகள் அதாவது ஒரு ஆசனத்தைக் கூட பெற தகுதியற்ற கட்சிகள் மக்களுடைய செல்வாக்கைப் பெறாத கட்சிகள் இவ்வாறானதொரு நிலைக்கு மக்களைத் தள்ளலாமென முன்பே கூறியிருந்தோம்.
இதன் காரணமாக மக்களுடைய உரிமைக்கு பாதகம் ஏற்படுமெனக் கூறினோம். இக்கட்சிகளை தேர்தலில் இருந்து விலகும்படி கோரிக்கை விடுத்தோம்.
அவர்கள் விலகவில்லை. அடம்பிடித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன.
இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி
சிறிலங்காவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.
ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்து, மாவட்டரீதியாக அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.
மேலும், தேசியப் பட்டியலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி என்பதால், வரும் நாடாளுமன்றத்தில் குறைந்த்து 15 ஆசனங்களைக் கொண்ட கட்சியாக கூட்டமைப்பு திகழும்.
அதேவேளை, கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வாக்குகளின் அடிப்படையில், இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இரண்டாவது தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால், கூட்டமைப்பில் பலம் 16 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.