வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 19.08.2015 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலை வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் இருந்து திருவீதியுலாவாக கொடித் தம்பத்தை நோக்கி வருகை தந்தார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற பூசைகளை அடுத்து கொடியேற்றம் நடைபெற்றது.
முருகப் பெருமானின் கொடியேற்றம் காண குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் அதிகாலை முதலே ஆலயத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் முருகப் பெருமானின் அருளை வேண்டி அரோகரா கோஷம் ஆலயச் சூழலெங்கும் ஒலிக்க காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
குடாநாட்டு மக்கள் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வந்த மக்கள் இன மத பேதங்களைக் கடந்து பக்தி சிரத்தையுடன் முருகப் பெருமானைத் தரிசித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.