நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்போம். இதற்காக அரசுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இணையவேண்டும்
என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்ட அபிவிருத்தி அதிகார சபைகள் அமைக்கப்பட்டு கிராம ராஜ்ஜியங்கள் ஊடாக அதிகாரம் பரவலாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார்.
அலரிமாளிகையில் திறந்தவெளியிலேயே ஊடகவியலாளருடனான இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற புரட்சிக்கு கடந்த 17ஆம் திகதி மக்கள் ஆணை வழங்கி அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நான் பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னர் எம்.பி.மார்களை இணைத்துக் கொண்டு நல்லாட்சியை தொடர தயாராயிருக்கிறேன்.
இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க் கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
பிரதமராக நான் பதவியேற்ற பின்னர். இரண்டொரு தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் நல்லாட்சியை தொடர்வது தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசினேன்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் அனைவரும் இணைந்து இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் புதிய பாராளுமன்றத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அனைவரும் ஒன்றினணந்து இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்போம். அதற்காகப் புதிய அரசுடன் அனைவரும் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு நல்லாட்சியின் பங்காளர்களாக வேண்டும்.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.
அரசுடன் இணைந்து நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வோம். மக்களின் பிரச்சினைகளுக்கு இணைக்கப்பாட்டுடன் தீர்வுகளைக் காண்போம்.
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள செயற்குழுக்களைவிட மேலதிகமாக செயற்குழுக்கள் அமைக்கப்படும்.
ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும். இதில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும். மாவட்ட அபிவிருத்தி அதிகார சபைகள் அமைக்கப்படும்.
அத்தோடு கிராம ராஜ்ஜியங்களை உருவாக்கி சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படும். இதனூடாக அதிகாரம் பரவலாக்கப்படும்.
நான் முன்வைத்துள்ள கொள்கைத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படும்.
இணைக்கப்பாட்டு அரசியலுடன் நல்லாட்சியும் நலன்புரித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும். ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இதனைத் தெரிவித்தேன். எனவே இதிலிருந்து எவருக்கும் விடுபட முடியாது.
இத் தேர்தலில் நீதி நியாயம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எமது அரசியல் கலாசாரமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேசிய வேலைத்திட்டத்திற்கு அனைவரதும் ஆதரவும் பெற்றுக்கொள்ளப்பட்டு “விச்சவி” அரசியல் முறைமையில் ஆட்சி முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார். அதனோடு இணைத்து எமது அரசியல் திட்டங்களை முன்னெடுப்போம்.
இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு
இலங்கையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆதரவைத் தருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய அரசுக்கு ஆதரவு தர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது. மேலும், சந்திரிகா குமாரதுங்க தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதாக ஊடகங்களிடம் கூறிய அக்கட்சியின் துணைச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மத்தியக் குழு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்தார்.
இந்த தேசிய அரசாங்கம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் சிறப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம , மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்தக் குழு தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் துமிந்த திசாநாயக்க கூறினார்.
குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது இந்த தேசிய அரசாங்கம் செயல்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.