சண்டியர் ஆதிக்கம்:
இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது.
கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும் நடந்துகொண்டனர்.
அவர்களை ‘விலாசங்கள்’ என்று பொதுவாக அழைப்பதுண்டு. ‘விலாசம்’ காட்டுவதென்றால் ஒரு நாலு பேருக்காவது நடுவீதியில் வைத்து அடிக்கவேண்டும.
நாலுபேருக்கு அடிப்பவனோடு கூடித்திரிந்தே ‘விலாசம்’ பெற்றவர்களும் பலர் .இருக்கிறார்கள்..
இதில் செல்லக்கிளி முதல் ரகம்.
ஒரு பொலிஸ்காரர் ஏதோ முறைப்பாட்டை விசாரிக்க செல்லக்கிளியிடம் வந்தார். செல்லக்கிளி அந்த பொலிஸ்காரரை அடித்துவிட்டாராம.
“செல்லக்கிளி பேய் விலாசம் மச்சான்” யாரும் வம்பு தும்புக்கு போகமாட்டார்கள்.
அதனைவைதே பெண்களோடு சேஷ்டைகள் செய்வது, கடைகளில் கப்பம் வாங்குவது என்று செல்லக்கிளியின் கொடி பறந்தது.
ஒரு நாள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்புறமிருந்த தேனீர்க் கடைக்கு தனது நண்பரோடு சென்றார் செல்லக்கிளி.
செல்லக்கிளியை தேடித்திரிந்த இயக்கத்திற்கு தகவல் பறந்தது. மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்து காத்திருந்தார்கள்.
தேனீர் அருந்திவிட்டு தனது நண்பருடன் வெளியே வந்தார் செல்லக்கிளி. முதல் வெடி நெற்றியை குறிபார்த்து வைக்கப்பட்டது. குறி பிசகவில்லை. செல்லக்கிளி செத்துப்போனார்.
ஒழிப்பிலும் போட்டி
சமூக விரோதிகள் ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இதனால் சமூக விரேதிகள் ஒழிப்பு நடவடிக்கையிலும் இயக்கங்கள் மத்தியில் போட்டி தலைதூக்கியது.
தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலோ) என்ற இயக்கத்திற்கும், தனது பங்குக்கு சமூக விரோதிகள் சிலரையாவது கொல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
இயக்கங்களின் போட்டியால் மாட்டிக்கொண்ட கோழிக்கள்ளன்
அதன் விளைவு கொஞசம் நகைச்சுவை கலந்த விபரீதம். அதையும் சொல்லுகிறேன்.
யாழ்பாணம் மானிப்பாயில் ஒரு பிரபல அரிசி ஆலையில் நல்லிரவு நேரத்தில் கோழிகளை திருடினார் ஓர் இளைஞர்.
கோழிகள் போட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட உரிமையாளர் கரல் கொடுக்க அயலவர்கள் திரண்டுவிட்டனர்.
11கோழிகளோடு மாட்டினான் கோழி திருடன்.
இந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடிகொடுத்து விட்டு, அருகிலுள்ள தந்திக்கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர்.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டது.
தங்களோடு கோழித்திருடனை அனுப்புமாறு கேட்டு, அவனது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றது.
அதே நாள் யாழ்பாணம் மத்திய சந்தையில் ஒரு இளைஞருக்கு தர்ம அடி நடந்துகொண்டிருந்தது. ஒரு நபரிடமிருந்து 95/-ரூபா பிக்பொக்கட் அடித்துவிட்டார் அந்த இளைஞன்.
கோழித்திருடனை கடத்திச் சென்ற அதே இளைஞர் குழு அங்கும் தோன்றியது. பிக்பொக்கெட் திருடனை கூட்டிச்சென்றுவிட்டது.
பின்னர் அவர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு உடல்கள் மானிப்பாய் வீதியில் போடப்பட்டிருந்தன.
உடல்களின் அருகில் தீர்ப்பு வழங்கியதற்கு உரிமை கோரியிருந்தது தமிழீழ இராணுவம்.(ரெலோ)
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் புளொட் அமைப்போடு நட்பாக இருந்தது தமிழீழ விடுதலை இராணுவம். தமது தலைவர் ஒபரோய் தேவனை புலிகள் சுட்டபின்னர் “புளொட்” அமைப்பின் உதவியோடு தான் “ரெலோ” இயங்கியது
சமூக விரோதிகள் ஒழிப்புக்கு மக்களிடம் ஆதரவு இருந்தது உண்மைதான். ஆனால் கோழிக் கள்ளனுக்கும் பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டணை வழங்குவதை மக்கள் வரவேற்க வில்லை.
பொலிஸ் அதிகாரி உதவி
யாழ்பாணம் “மயிலிட்டியில் மற்றொரு சம்பவம்.
வீடொன்றுக்குள் கொள்ளையிட முயன்ற இளைஞர் குழுவொன்றை ஊர் மக்கள் திரண்டு துரத்தினார்கள். ஒருவர் மட்டுமே ஊர் மக்கள் கையில் வசமாக சிக்கிக்கொண்டார்.
இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் பொலிசில் ஒப்படைக்கலாம் என்று அவரை கட்டிவைத்து காவல் காத்தனர் ஊர் மக்கள்.
இந்த செய்தி இயக்கமொன்றுக்கு எட்டியது. காரொன்றில் பறந்தனர்.
“பொலிசாரிடம் ஒப்படைத்தால் ஒழுங்காக விசாரிக்க மாட்டார்கள். நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” என்றனர் காரில் வந்த இளைஞாகள்.
அழைத்து செல்லப்பட்டவருக்கு பூசை கொடுத்து அவரது கூட்டாளிகள் பற்றிய விபரங்களையும் அந்த இயக்க இளைஞர்கள் திரட்டிக்கொண்டனர்.
பின்னர் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் நடவடிக்கையே அது. ஈ.பி.ஆர்.எல்.எப்
அக் கொள்ளை பற்றி விசாரித்தபோது ஒரு பொலிஸ் அதிகாரியும் உதவினார்.
அத்தோடு கொள்ளையர்களிடம் கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றையும் இயக்கத்திடம் தனது பரிசாக கொடுத்தார்.
அவர்தான் இன்ஸ்பெக்கடர் ஜெயக்குமார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இருந்தவர். முன்னாள் ராஜாங்க அமைச்சர் திருமதி ராகமனோகரி புலேந்திரனின் சகோதரர்.
இரண்டாம் ஈழப்போர் காலகட்டத்தில் புலிகளால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமார்.
புலிகளின் சிறையிலேயே மரணமானார் என்பது குறிப்பிடதக்கது. அவரது உறவினர்களுக்கு ஜெயக்குமார் இறந்துவிட்டார் என்ற தகவலையும் அவரது உடைகளையும் மட்டுமே கொடுத்திருந்தனர் புலிகள்.
“போக மாட்டேன் ஐயா”
சமூகவிரோதிகள் ஒழிப்பில் இயக்கங்கள் போட்டிபோட்டுக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம்.
யாழ் பொலிஸ் நிலையத்தில் திருட்டுக்குற்றங்களுக்காக ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவரது வீட்டுக்கு கடிதம்மொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கடிதத்தை எடுத்துக்கொண்டு அவரது தயார் பொலிஸ் நிலையம் சென்றார்.
மகனிடம் கொடுத்தார். கடிதத்தை படித்து முடித்தவரின் முகம் இருண்டுவிட்டது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காலில் போய் விழுந்தார்.
“ஐயா என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் இங்கேயே இருக்கிறேன். நான் செய்த குற்றங்களுக்கு நீங்களே தண்டனை தந்துவிடுங்கள் ஐயா” என்றார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆச்சரியம்.கடிதத்தை வாங்கி பார்க்கிறார். அது , “சங்கலியன் பஞ்சாயத்”தால் தால் அனுப்பப்பட்டிருந்த எச்சரிக்கை கடிதம்.
அன்றும் ஒரு காட்சி
தற்போது அரசியல் தீர்வு யோசனைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்களும், எதிர்பார்ப்புக்களும் நிலவுகின்றனவல்லவா?
அதனால் 84 இலும் இதுபொலவே தோன்றி மறைந்த காட்சிகள் சிலவற்றை காலப்பொருத்தம் கருதி நினைவுபடுத்திவிட்டு மேலே செல்லலாம்.
84இல் ஜே.ஆர். அரசு வட்டமேசை மகாநாடு நடத்தியது பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
இலங்கையின் தமிழ் பத்திரிகைகள், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவையெல்லாம், வட்ட மேசை மாநாடு தமிழர் பிரச்சனையைத் தீர்க்கப்போவதாகவே எழுதிவந்தன.
வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒதுங்கியிருந்ததைக் கண்டித்தும் வந்தன.
பொல்காவலையில் மாதிரிக் கிராமம் ஒன்றை திறந்து வைத்து அன்றைய பிரதமர் பிரேமதாசா உரையாற்றினார். அவர் அப்போது சொன்னது இது.
“நம் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலையில் பொது மக்களின் ஆலோசனைகளை நாம் கோருகிறோம்” நாம் சாவாதிகாரிகள் போல் செயல்படவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் பிரச்சனைகளை தீர்க்க மநாடு நடத்தலாம். மக்களின் ஆலோசனைகளை கோரலாம், இதில் எந்தவித தவறுமில்லை. நாட்டில் ஒற்றுமை நிலவவேண்டும்.
சுதந்திரம் கட்டிக்காக்கப்படவேண்டும. இதற்கு பிக்குகளின் ஆலோசனைகள் அவசியம்.
அமிரின் முழக்கம்
இதேவேளை கூட்டணிச் செயலதிபர் திரு. அ.அமுர்தலிங்கம் பேசியது இது :
“வடக்கும்-தெற்கும்” இணைந்த சுயாட்சி மூலமே கிழக்கை காப்பாற்ற முடியும். வடகிழக்கு இணைந்த மாநில நிர்வாகத்தின் மத்திய நிலையமாக திருகோணமலை இருக்கும்.
இன்று திருமலையில் எவ்வாறு திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறதோ, அதனை அடுத்துள்ள விந்தனை பகுதியிலும் குடியேற்றம் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் அம்பாறையில் முஸ்லிம்களைவிட சிங்களவர்கள் தொகை கூடிவிட்டது. இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் அம்பாறையில் தடுத்து நிறுதப்படவேண்டுமானால் வடக்கும்-கிழக்கும் இணைந்த மாநில ஆட்சி அமைக்கவேண்டும”.
இது நிந்தாவூர் முன்னாள் எம.பி.முஸ்தப்பா தலைமையில் கல்முனையில் மெதடிஸ்த சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமிர்தலிங்கம் பேசியது.
அம்பாறையை பாதுகாககவே மாநில சுயாட்சித் திட்டம் என்று அமிர் கூறினார்.
பிராந்திய சபை திட்டத்தில் அம்பாறையை விட்டுக்கொடுக்க தயார் என்று கூட்டணித்தலைவர் திரு.சிவசிதம்பரம் சமீபத்தில் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
முஸ்லிம் காங்கிரஸ்
1984 இல் முஸ்லிம் காங்கிரஸ் இப்போது உள்ளதைபோல செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.
ஆயினும் தனி மாகாணசபை கோரிக்கை மூலமாக தனது குரலை உயர்த்த தொடங்கியது.
கூட்டணி தலைவர்களை தனியே சந்தித்து பேச்சு நடத்தியது முஸ்லிம் காங்கிரஸ்.
மாநில சுயாட்சிக்கோரிக்கைக்கு பௌத்த மதகுமாரின் பலத்த எதிர்ப்பும் நிலவியது.
மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான புதிய ஏற்பாடுகள் எதனையும் ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதனையடுத்து பௌத்த மகாசங்கத்தினரை கூட்டணித் தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.
மாநில சுயாட்சி பெளத்த மதத்திற்கோ, அல்லது சிங்கள மக்களுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்களுக்கு விளக்கிக்கூறினார்கள்.
எனினும் அதனை பௌத்த சங்கங்கள் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளவில்லை.
இத்தனைக்கும் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் போராளிகள் அமைப்புக்களது கருத்துகள் எதனையும் கூட்டணி தனது காதில் போட்டுக்கொள்ளவு இல்லை.
தமிழீழம் காண வாருங்கள் என்று இளைஞர்களை அழைத்த கூட்டணி, அதற்காகப் போராடிக்கொண்டிருந்த இயக்கங்களை கவனத்தில்கொள்ளவில்லை.
இறுதியில் வட்டமேசை மாநாடு தோல்வி கண்டது.
வேலணையில் கொள்ளை
84ல் யாழ்பாணத்தில் வேலணை இலங்கை வங்கியில் குறிவைத்தது தமிழீழ விடுதலை இராணுவம்(ரெலோ)
வங்கிக்குள் புகுந்த இளைஞர்கள் இரும்புப் பெட்டியை தூக்கிவந்து ஒரு வானில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
தகவல் பொலிசாருக்கு எட்டியது.
இரும்புப் பெட்டியோடு வந்த வேன் பண்ணைப் பாலத்தடியில் வைத்து மறிறக்கப்பட்டது.
வேனில் இருந்து குதித்து “ரெலா”உறுப்பினர்கள் தப்பி ஓடினார்கள்.
பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
ரெலா இயகத்தைச் சூந்த கணேசலிங்கம் என்பவரே பலியானவராவார்.
இரும்புப் பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது,
மீட்கப்பட்ட இரும்புப்பெட்டிக்குள் 61/2 இலச்சம் ரூபா பணம் இருந்தது.
குறிபிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்படக்கூடிய முறையில் அமைந்த இரும்புப் பெட்டி அது.
ரெலா இயக்கத்தின் நடவடிக்கைகள் சிலவற்றை நோக்கினோம். ரெனா இயகத்தின் ஒரு விபரீத நடவடிக்கை பற்றி நிச்சியம் அறிந்துகொள்ளவேண்டும.
தமிழ் தேசிய இராணுவம் என்பதைத்தான் சுருக்கமாக “ரெனா” என்று அழைத்தார்கள்.
இதன் தலைவர் தம்பாபிள்ளை மகேஸ்வரன்.
தமது இயக்கத்தின் மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றிற்கு திட்டமிட்டார் மகேஸ்வரன்.
திட்டம் அமோகமாகத்தான் இருந்தது. அதனைச் செயற்படுத்தியபோது ஒரு பயங்கரம் நிகழந்தது.
தொடரும்…
-எழுதுவது அற்புதன்–
புலிகளின் ஷெல் தொழிற்சாலையில் விபரீதம் :
யாழ்பாணத்தில் புலிகளது ஷெல் தொழிற்சாலை ஒன்றில் 10.07.95 அன்று வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது.
இது பற்றி தகவல்களே திரிபடைந்து 150 பொதுமக்கள் புலிகளின் வெடி விபத்தால் பலி என்று வதந்திகாளகியதும் குறிப்பிடதக்கது.
முரசு மட்டுமே வதந்தியை மறுத்திருந்தது.
யாழ்பாணத்தில் கொக்குவிலில் உள்ள தலையாளி என்னுமிடத்தில் ஒரு வீட்டில் இருந்த ஷெல் தொழிற்சாலையிலேயே வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தால் பெரும் தீப்பிழம்பு உருவானது. அயலில் உள்ள வீடகளின் ஜன்னல் கண்்ணாடிகள் உடைந்து பலர் காயமடைந்தனர்.
கோபமடைந்த அயலவர்கள் புலிகளை எதிர்த்து திரண்டுவர, மன்னிப்பு கேட்ட புலிகள் காயமடைந்தவர்கள் யாவரையும் தமது வாகனங்களில் ஏற்றி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வெடிவிபத்தில் கப்டன் கண்ணாளன் (ஏரம்பு-கந்தசாமி-மட்டகளப்பு) எனப்படும் புலிகள் அமைப்பு உறுப்பினர் பலியானர்.
புலிகளது நாலு ஆதரவாளர்கள் பலியானார்கள்.
1.தசரத ராஜ்குமார் சந்தாணம்- கனகராயன் குளம்-வவுனியா.
2. நடராஜா ராஜபாலன்- காங்கேசன்துரை,
3.நடராஜா கணநாதன், அத்தியடி-யாழ்பாணம்.
4. சோமசுந்திரம் மிதிலைகாந்தன் –பூநாறி மடம் லேன் யாழ்பாணம். ஆகியோரே பலியான ஆதரவாளர்களாவர்.
நவாலி தேவாலயம் மீத தாக்குதல் நடந்தது நூறுவீதம் உண்மை.
தேவாலய கூரைகள், ஜன்னல்கள் யாவும் சின்னாபின்னமாகின. தேவாலயத்தோடு இருந்த கட்டிடங்களுக்குள் தஞ்சமடைந்த மக்களே கொல்லப்பட்டனர்.
தேவாலயம் சேதங்கள், காயங்களோடு தப்பிக்கொண்டு விட்டது. தரைமட்டமாகவில்லை என்பதால், தாக்குதலே நடக்கவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.
தேவலாய வளாக இடிபாடுகளுக்கிடையில் புக்காரா விமானத்தின் சிதைவடைந்த பாகங்களை புலிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அக்காட்சியே படத்தில் இருக்கிறது.
எம்.ஜி.ஆரை குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39