அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வழங்கப்பட உள்ள மேலதிக ஆசனத்தை அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதிக்குரிய வேட்பாளர் கென்றி மகேந்திரன்ற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 10.30 தொடக்கம் சுழற்சி முறையிலான சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள் இவர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்துதெரிவித்த உண்ணாவிரத்தில் ஈடுபட்டோர்,
மக்களின் அகிம்சை போராட்டம்; மூலமான வேண்டுகோளினை ஏற்று கல்முனை தொகுதி வேட்பாளர் கென்றி மகேந்திரனிற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குதல் சாலப்பொருத்தமானது.
கல்முனைப் பிரதேச தமிழ் சமூகம் கடந்த மூன்று தசாப்த காலமாக அரசியல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றமை அனைவராலும் அறியப்பட்டதொன்றாகும்.
கல்முனையிலிருந்து பாராளுமன்றத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் இத்தகைய சவால்கள் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் கல்முனை மக்களின் உள்ளக் கிடக்கைகளை உற்ற முறையில் விளங்கிக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளிற்கு செவிசாய்க்க வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமையாகும்.
அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றினை கல்முனைப் பிரதேச மக்களுக்காக வழங்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு கல்முனை மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.