ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பொறுப்பேற்கும் சாத்தியம் காணப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அமைச்
சர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் 30 அமைச்சர்களும் 40 பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் 15 அமைச்சர்களும் சுதந்திரக்கட்சியின் 15 பேரும் இன்று பதவியேற்கவுள்ளனர். அத்துடன் இரண்டு பக்கத்திலிருந்தும் பிரதியமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று பேர் நேற்று அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றிருந்தனர்.
இதேவேளை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க பிரதியமைச்சுப் பதவிகள் தவணை தவணையாகவே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று குறிப்பிட்ட தரப்பினருக்கும் எதிர்வரும் நாட்களில் மற்றும் சிலருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
மொத்தமாக தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 50 பேர் நியமிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் 33 பேரும் சுதந்திரக் கட்சியின் 17 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இதேவேளை சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுக்களிலேயே தேர்தலின்போது சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஐந்து பேருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கடசியின் சார்பில் போட்டியிட்டமையே தாம் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடக் காரணம் என்று குறித்த ஐந்து பேரும் கூறிவருகின்றனர்.
எனவே அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டாவிலேயே அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பிரதியமைச்சர்களை பொறுத்தமட்டில் சுதந்திரக் கட்சிக்கு 22 பிரதியமைச்சுப் பதவிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு 28 அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது சுதந்திரக் கட்சிக்கு 15 பிரதியமைச்சுப் பதவிகளும் 7 இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன.
எவ்வாறெனினும் அமைச்சு பதவிகளை பெறுவதில் இன்னும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் இடம்பெறுவதாகவே தெரிகின்றது.
எனினும் சுதந்திரக் கட்சி கோருகின்ற அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிடின் சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துவிடலாம் என்று ஜனாதிபதி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக நிதியமைச்சு விடயத்திலே முரண்பாடுகள் தோன்றியுள்ளன. எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நிதியமைச்சை விட்டுக்கொடுக்குமாறு கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி அதற்கு இணங்கியதாகவும் கூறப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவி்லலை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை மொத்த அமைச்சுக்களின் எண்ணிக்கை 100 அல்லது 90 ஆக அமையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும்.எனினும், தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணிக்கையை உயர்த்த முடியும்.
அந்தவகையில் தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதால் அமைச்சுப் பதவிகள் அதிகரிக்கப்படவுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளன.
ஐக்கிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளன. அதன்படியே தற்போது அமைச்சுப்பதவிகளும் பகிரப்படவுள்ளன.