முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் நேற்று 6 மணி நேரம் விஷேட விசாரணை நடத்தப்பட் டது.
பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த விசாரணைகளை முன்னெடுத்தது. பண்டாரநாயக்க
சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 5 ஆம் பிரிவில் அமைந்துள்ள இந்த ஆணைக் குழுவின் அலுவலகத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.
103 ஆம் இலக்க மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்த விசாரணைகளில் ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் இதன் போது பெரிதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு கோத்தபாய ராக்ஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதில் பங்கேற்றிருக்கவில்லை.
இறுதியாக தேர்தல் காலத்தின் போது கோத்தபாயவை விசாரணைக்கு ஆணைக்குழு அழைத்திருந்தது. எனினும் தேர்தல் காலம் என்பதைக் கருத்தில் கொண்டு விசாரணைகளை ஆணைக்குழு பிற்போட்டது.
கடந்த வாரம் மிரிஹான பொலிஸார் ஊடாக அறிவித்தல் அனுப்பிய ஆணைக் குழு நேற்றைய தினம் கோத்தபாய ராஜபக்ஷவை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந் நிலையில் நேற்று முற்பகல் 10.10 மணிக்கு தனது இரு உதவியாளர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டபத்துக்கு கோத்தபாய ராஜபக்ஷ வருகைத் தந்தார். இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கோத்தபய ராஜபக்ஷவை சூழ்ந்துகொண்டதுடன் ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராவது குறித்து வினவினர்.
தனது கையில் இருந்த கோவையை பார்த்தவாறே இதற்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ஷ ‘ இது ஒரு சின்ன விடயம்….‘ என கூறியவாறே 103 ஆம் இலக்க விசாரணை அறைக்குள் சென்றார். இதனையடுத்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மாலை 4.20 மணி வரை தொடர்ந்தது.
ரக்ன லங்கா நிறுவனத்தின் ஊழியர்களை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது தேர்தல்கள் பணிகளுக்கு பயன்படுத்தியமை, அந் நிறுவன ஆயுதங்களை வாடகைக்கு வழங்கியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது விரிவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரக்ன லங்கா நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 500 ஊழியர்களையும் 60 இலட்சம் ரூபாவையும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளில் விஷேட கவனம் செலுத்தப்பட்டதாக குறித்த ஆணைக் குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் விசாரணை அறையில் இருந்து வெளியேவந்த கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: என்ன விடயம் தொடர்பில் உங்களை விசாரணை செய்தார்கள்?
கோத்தா: ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் தான் விசாரணை செய்தார்கள். உங்களுக்கும் இப்போதுச் செய்திகள் இல்லையல்லாவா?
கேள்வி: நீங்கள் அங்கு என்ன சொன்னீர்கள்?
பதில்: அவற்றை சொல்வது சரியில்லையல்லவா. அதனால் அவை தேவையில்லை. என்று கூறியவாறே தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
ரக்ன லங்கா நிறுவனமானது ஓய்வுபெற்ற முப்படை வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த நிறுவனமாகும்.
இதன் தலைமையகமும் பண்டாரநயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இயங்கிய நிலையில் அதற்கு சீல் வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனய்வுப் பிரிவு மேற்கொன்டு வருகின்றது.
இந் நிலையிலேயே கடந்த 100 நாள் அரசாங்கத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் உள்ளிட்டவற்றை விசாரணை செய்ய விஷேட ஜனதிபதி ஆணைக் குழுவொன்றை அமைத்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் உயர் நீதிமன்றின் நீதியரசர் அனில் குணரத்ன, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, ஓய்வுபெற்ற கணக்காய்வளர் நாயகம் சரத் மாயாதுன்ன மற்றும் ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் ஐய்யாதுரை கனனதாஸன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந் நிலையில் குறித்த ஆணைக் குழுவிற்கு ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு தொடர்பிலேயே நேற்றைய விசாரணைகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.