ஜோடியொன்று ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வு குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மைக்கேல் ஹேவார்ட் என்ற மணமகனும் மெகான் கிரான்ட் என்ற மணகளுமே இவ்வாறு ஓடும் புகையிரதத்தில் திருமணம் செய்துள்ளனர்.
இந்தத் திருமணத்தில் விருந்தினர்களாக கலந்து கொள்ள அந்த ஜோடியின் 30 உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவருக்கும் குறிப்பட்ட புகையிரதத்தில் ஏறி பேர்த் நகர புகையிரத நிலையத்தை வந்தடைய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தாம் புகையிரதத்தில் வைத்து திருமணம் செய்யவுள்ளதை அவர்களுக்கு அறிவிக்காத அந்த ஜோடி, தாம் வெறுமனே திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே செய்யவுள்ளதாக அவர்களை நம்ப வைத்திருந்தனர்.
இந்நிலையில் பேர்த் நகரின் தென்மேற்கேயுள்ள பிரெமன்ரில் எனும் இடத்தில் பாரம்பரிய திருமண ஆடை அணிந்து புகையிரதத்தில் ஏறிய மைக்கேல் ஹேவார்ட்டும் மெகான் கிரான்ட்டும் திகைப்பில் விழியுயர்த்திய விருந்தினர்கள் மற்றும் பயணிகள் முன்பாக மோதிரங்களை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.