நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏகபோக வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏழு நாட்களாக இழுபறிப்பட்ட தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற ஆசன சிக்கல் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது.
பத்து, பதினொரு தேசியப் பட்டியல் ஆசனங்களை வெற்றிகொண்ட கட்சிகளே தமது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்து, சட்டு புட்டென்று காரியத்தை முடித்துக்கொண்ட நிலையில், இரண்டே இரண்டு ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்று முடிவு செய்வதற்கு தமிழ்க் கூட்டமைப்புக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் ஏழு நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஆனால், இந்த இழுபறிகள் இன்னமும் முடிவடையவில்லை என்று புதிய குண்டொன்றை தூக்கி போடுகிறார்கள் கூட்டமைப்புக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் சார்பாக இம்முறை தேர்தலில் குதித்த பலர் மூத்த உறுப்பினர்கள். அவர்களில் பலர் அரசியலில் நெடுங்காலம் அனுபவம் மிக்கவர்கள்.
சிலர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இன்னும் பலர் கட்சிக்குப் பல காலமாக விசுவாசமாகச் செயற்பட்டவர்கள். முக்கியமாகக் கூறப்போனால், இவர்களில் பலர் பிரசார போட்டி மிக்க இம்முறை தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக கூட்டமைப்பை மக்களுக்;கு நெருக்கமாக கொண்டுசெல்வதற்கு பல்வேறு வகையில் தொழிற்பட்டவர்கள்.
இவர்கள் எல்லோரையும்விட, இம்முறை தேசியப் பட்டியல் விடயத்தில் மிகமுக்கிய தலையிடியாக அமைந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்தான். இவர்கள்தான், கூட்டமைப்பின் இந்த காலம் தாழ்த்திய முடிவுக்குக் காரணம் என்றும் தெரியவருகிறது.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது போன்ற தடாலடி அறிவிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தேர்தலுக்கு முன்னர் விடுக்க விரும்பவில்லை. கூட்டமைப்பைப் பொறுத்தவரை அது யதார்த்தபூர்வ அணுகுமுறையாகவும் இருக்காது.
ஏனெனில், பெரிய கட்சிகளுக்குக் கிடைக்கப்போகும் தேசியப் பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு பங்கு பிரிக்கும் போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிது.
ஆனால், கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஒரே ஓர் ஆசனம்தான் கிடைக்கும் என தேர்தலுக்கு முன் எதிர்பார்த்திருந்தது.
அந்த இடத்துக்கு யாழ். பல்கலைக்கழ பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை நியமிப்பது என்ற கொள்கையளவிலான முடிவுடன் காத்திருந்தது. (ஆனால், தேர்தலின் பின்னரான முடிவுகள் இவ்வாறு குழுhயடிச் சண்டையாக மாறும் என்றும் கூட்டமைப்பு தலைமைக்கு தெரியாமலும் இல்லை)
இருப்பினும், வடக்கு – கிழக்கில் பதினான்கு ஆசனங்களை வென்று இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்த கையோடு, அதற்கான போட்டி என்பது கூட்டமைப்புக்குள் இன்னொரு தேர்தல் வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளியதுபோன்ற திரிசங்கு நிலையை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்படுத்தியது.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை வெளியிலிருந்து எதிர்ப்புக்களைச் சந்தித்தும் சமாளித்துக்கொண்டுமிருந்த கூட்டமைப்பின் தலைமை 18ஆம் திகதிக்குப் பின்னர் ‘உள்வீட்டு’ பங்கு பிரிப்புக்கு பஞ்சாயத்து பார்க்கவேண்டிய நிலைக்கு ஆளானது.
கூட்டமைப்பின் தலைமை இந்த ஆசன பங்கீட்டில் கைக்கொள்ள வேண்டிய நியாயமான அணுகுமுறைகள் குறித்து பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றில் பல தனிநபர் தீர்வு திட்டங்களாகவும், இன்னும்பல கூட்டமைப்பு என்று முழு கட்சி நலன் சார்ந்ததாகவும், இன்னும் சில கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகளாகவும் காணப்பட்டன.
சுரேஷ் பிரேமசந்திரன்,
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற மூத்த உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன், அருந்தவபாலன், சிறிகாந்தா, அரியநேந்திரன், துரைரட்ணசிங்கம், விநோனோதரலிங்கம் ஆகியோரின் பெயர்களும் சந்திரகுமார் சந்திரநேருவின் பெயரும் இந்தத் தேசியப் பட்டியல் ஆசனப் பங்கீட்டில் பரிசீலிக்கப்படவேண்டும் என்று பரவலான கோரிக்கை ஒன்று முதலில் முன்வைக்கப்பட்டது.
இந்த இடத்தில், வழமைபோலவே வடக்குக்கு ஒன்று கிழக்குக்கு ஒன்று சமமாக பகிரப்படவேண்டும் என்ற பிரதேச சமத்துவத்தை வலியுறுத்திய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள்- தலைவர் சம்பந்தனுக்கு தங்கள் தரப்பு மதியுரைஞர் வேலைகளை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தனர்.
கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலையில் நடைபெற்ற எல்லா தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கும் தலைவர் சம்பந்தன் அவர்கள் தன்னுடனேயே அழைத்துக்கொண்டு திரிந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்கள். திருகோணமலையில் கூட்டமைப்பு சார்பில் இளம் உறுப்பினரான யதீந்திரா இம்முறை தேர்தலில் போட்டியிட்டபோதும், சம்பந்தரின் பிரசார மேடைகளில் துரைரட்ணசிங்கம் மாத்திரமே காட்சியளித்தார்.
திருகோணமலையில் இரண்டாவது ஆசனத்தை இலக்கு வைத்து அதை துரைரட்ணசிங்கத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்காக தலைவர் சம்பந்தர் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கொண்ட இந்த பிரசாரம், தேர்தல் முடிவுகளில் அவருக்கு சாதகமாக முடிவுகளை கொடுக்காததால் –
துரைரட்ணசிங்கத்துக்கு கூட்டமைப்பின் தலைமைத்துவம் எப்படியாவது தேசியப் பட்டியலின் ஊடாக ஆசனத்தை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கு இருந்தது.
அத்துடன், தலைவர் சம்பந்தன் அவர்கள் தேர்தல் முடிந்த கையோடு ‘2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் மிகவும் மும்முராக பணியாற்றவேண்டியிருக்கும்’ என்ற காரணத்தினால் –
அவரது தொகுதியிலிருந்து தற்போது மிஞ்சியிருக்கும் ஓர் ஆசனத்தையும் பறிகொடுத்துவிடாது மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒருவர் தேவை என்ற அடிப்படையில் துரைரட்ணசிங்கம் அவர்களை உறுப்பினராக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு, அது ஓரளவுக்கு கட்சி மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆசனப் பங்கீடு விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பின் தலைமையைச் சந்தித்து யோசனை கூறுகையில் –
இம்முறை தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 14 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ளதால், தேசியப் பட்டியல் ஊடான இரண்டு ஆசனங்களில் ஒன்றை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின் பொது உடன்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படும் ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றும், மற்றையதை தமிழரசுக் கட்சி தான் விரும்பியவருக்கு வழங்கலாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த யோசனையை கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையும் ஏற்றுக்கொண்டது.
அதேவேளை, கூட்டமைப்பில் இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வெற்றிடம் குறித்து பல்வேறு தரப்பில் சிலாகிக்கப்பட்டது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட சாந்தி சிறீஸ்கந்தராஜா (18,081) அவர்கள் வெற்றிபெற்றதாக தேர்தலுக்கு அடுத்தநாள் முதலில் செய்திகள் வெளியானபோதும் வாக்குகளை மீள எண்ணுமாறு விடுத்த கோரிக்கையின் பின்னர் அதேதொகுதியிலிருந்து போட்டியிட்ட மருத்துவர் சிவமோகன் (18,412) அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆகவே, சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு அனுப்புவதன் மூலம் கூட்டமைப்பின் பெண் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப்படவேண்டும் என்று தேர்தல் பெறுபேறுகள் வெளியான நாள் முதல் கூட்டமைப்பின் தலைமையிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தன.
அவ்வாறான ஒரு முடிவினை மேற்கொண்டால், வடக்கிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவர் கூட்டமைப்பின தலைமைக்கு தலையிடியாகக்கூடும் என்று கருதப்பட்டது.
ஒருவர் கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன், மற்றையவர் இம்முறை தேர்தலில் – இரண்டாவது தடவையாக – விளிம்புநிலை தோல்வியை சந்தித்த அருந்தவபாலன்.
இவர்கள் இருவரது ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களை தேசியப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அமைப்பு ரீதியிலான அறிக்கைகளை விடுத்ததிலிருந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளுமளவுக்கு கூட்டமைப்பின் தலைமைக்கு தொடர் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவர்களுக்கும் இடையிலான தெரிவு விடயத்தில் – கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை – சுரேஷ் பிரேமசந்திரனை மீண்டும் உறுப்பினராக கொண்டுவருவதில் பெரிய திருப்தியிருந்ததில்லை என்கின்றன கூட்டமைப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
அதற்கு பல காரணங்களை அடுக்கிக்கொண்டுபோனவர்களிடம் விரிவாக பேசியதில் சில விடயங்களைத் தெளிவாக விளங்கமுடிந்தது.
மென் வலுவூடான அரசியல் உபாயத்தைத் தனது தீர்வுக்கான செல்நெறியாக வழிமொழிந்துகொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது என்று கூறப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்களில் – இவை தொடர்பில் நேரடியாக கூட்டமைப்பின் சார்பில் இயங்கிவந்த – சுமந்திரன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டு வந்தார் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
கூட்டமைப்பில் சுரேஷின் வகிபாகத்தைத் தமிழர்கள் தொடர்பான முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் ‘வெளித்தரப்புக்கள்’கூட அதிகம் விரும்பவில்லை என்றும் கூட்டமைப்பின் தலைமை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு, பிடிகொடுக்காமல் பதில் சொல்லக்கூடிய ஒரு வசனத்தின் ஊடாக சுரேஷை தேசியப் பட்டியல் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் வேட்பாளர்களில் – விருப்புவாக்கு அடிப்படையில் – ஏழாவது இடத்திலிருப்பவர் சுரேஷ் பிரேமசந்திரன் (29,906) அவருக்கு முதல் ஆறாவது இடத்திலிருப்பவர் அருந்தவபாலன் (42,925) ஆகவே, இந்த இருவரும் போட்டியிலிருக்கும்போது சுரேஷுக்கு ஆசனத்தை வழங்குவது முறையல்ல என மிக சாதுரியமாக சுரேஷ் விவகாரத்தை காய்வெட்டியது கூட்டமைப்பின் தலைமை.
சுரேஷ் விடயத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் டெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமது சாதகமான அழுத்தங்களை வழங்கியபோதும், எந்த வழியிலும் சாதகமாக விவாதிக்கமுடியாத படுதோல்வியை சுரேஷ் இம்முறை தேர்தலில் சந்தித்த காரணத்தினால், அது பலனளிக்கவில்லை என்கின்றன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
அப்படியானால், சாந்தி சிறிஸ்கந்தராஜாவையும் அருந்தவபாலன் அவர்களையும் வட பகுதியிலிருந்து எவ்வாறு தேசியப் பட்டியலின் ஊடாக அனுப்புவது?
சம்பந்தன் ஏற்கனவே முடிவு செய்த துரைரட்ணசிங்கத்தின் கதி என்ன?
போன்ற பிரச்சினைகள் எழுந்தபோதுதான் கூட்டமைப்பின் தலைமை சுழற்சிமுறையிலான பதவிக்காலம் என்ற தீர்வுத்திட்டத்தை கையிலெடுத்தது.
அதாவது, தேசியப் பட்டியல் ஊடான ஓர் ஆசனத்தை வடக்கின் ஊடாக சாந்தி சிறிஸ்கந்தராஜாவும் அருந்தவபாலனும் சுழற்சிமுறையில் பங்கிட்டுக்கொள்வார்கள் என்ற முடிவு ஏகமனதாக எட்டப்பட்டது.
அப்படியானால், கிழக்கில் துரைரட்ணசிங்கத்துடன் பதவியைப் பங்கிடப்போகும் நபர் யார்?
அந்த இழுபறி தொடர்ந்து நிலவுவதாகவே கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை தேர்தலில் மட்டக்களப்பில் ஓரளவுக்கு ஆரோக்கியமாக ஆசனங்களை பெற்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பு- அம்பாறையில் தனி ஓர் ஆசனத்தை மாத்திரம் பெற்றிருப்பதால் தமிழர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும்வகையில் தேசியப் பட்டியல் ஊடாக அங்கு ஓர் ஆசனத்தை வழங்கி எதிர்கால நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக தெரியவருகிறது.
அம்பாறையில் கடந்த தடவையும் ஓர் ஆசனம்தான் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தாலும், அங்கு துணிச்சலுடன் செயற்படவல்ல டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரனின் நடவடிக்கைகளுக்கு கௌரவம் அளிக்கும் விதத்தில் அவருக்கு அந்த சுழற்சிமுறை ஆசனத்தை வழங்குவதற்கு கூட்டமைப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கினால், அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சிக்கு ஆசனம் வழங்கியதாகவும் இருக்கும் என கூட்டமைப்பு தலைமை சிந்திப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்க் கூட்டமைப்பில் கடந்த ஒரு வாரமாக நடைபெறும் இந்தப் பதவி இழுபறிகளை பார்த்த பல நோக்கர்கள், இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காக தேர்தலில் போட்டியிட்டார்களா அல்லது பதவிகளை இலக்கு வைத்து தேர்தலில் குதித்தார்களா என்று கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மொத்தத்தில், தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்லப்போகும் அனைவரும் கூட்டமைப்பின் பட்டியலில் – பச்சையாக சொல்லப்போனால் – மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான்.
ஆனால், அடுத்த ஐந்து வருட பயணத்தில் தமக்கு சிக்கல் தராதவர்களை மட்டும் நாடாளுமன்றுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் சாதுரியமாக காய்களை நகர்த்துகிறது கூட்டமைப்பின் தலைமைத்துவம்.
இப்போது கிட்டத்தட்ட, இந்தச் சிக்கல்களின் முடிவுப் புள்ளிக்கு வந்தாயிற்று. அடுத்தது என்ன?
காத்திருப்போம்… எதிர்பார்த்திருப்போம்…