கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆடையின் ஒரு பகுதி சில்லில் சிக்கிய சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் இதன்போது மடியில் இருந்த தனது 10 மாத குழந்தையை இருக்கமாக அணைத்து காப்பாற்றியுள்ளமை அனைவரது மனதையும் நெகிழவைத்துள்ளது.
மும்பையை அடுத்துள்ள பால்கர் மாவட்டம் , பொய்சர் அருகில் உள்ள ஆலேவாடி எனும் கிராமத்தில் வசித்த ஆகாஷ் என்பவரது மனைவியான பிரனாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர்களுக்கு 2 வயது மகனும், ஸ்வாரா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆகாஷ் தனது மனைவி, 10 மாத பெண் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார். குழந்தையை தாய் தனது மடியில் வைத்திருந்துள்ளார்.
இதன் போது பிரனாலியின் ஆடையில் ‘துப்பட்டா’ திடீரென மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கியுள்ளது. இதனால் கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் சிக்கி சுமார்15 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
அப்போது தனது மடியில் இருந்த குழந்தையை காப்பாற்ற மார்போடு கட்டி அணைத்து கொண்டார். ஆனால் அவரது கழுத்தை துப்பட்டா இறுக்கியுள்ளது. மூச்சு திணறி உயிருக்கு போராடும் போது கூட குழந்தையை காப்பாற்றுவதிலேயே இலக்காக இறுக்க அணைத்து கொண்டிருந்துள்ளார்.
பதறி போன ஆகாஷ் மோட்டார் சைக்கிள் நின்றதும் மனைவி, குழந்தையை காப்பாற்ற முயன்றார். குழந்தை ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் உயிர் தப்பி இருந்தது. ஆனால் மனைவி பிரனாலி நிலைகுலைந்து போய் கிடந்தார்.
மனைவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்ர். ஆனால் துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் பிரனாலி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றபோது துப்பட்டா கழுத்தை இறுக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன் உயிரை விட்டு குழந்தையை காப்பாற்றிய தாயுள்ளத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.