ஹொண்டாரஸ் நாட்டில் மருத்துவர்களால் உயிரிழந்த தாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் எழுந்து பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வயதான குறித்த பெண் 3 மாத கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நித்திரையில் இருந்து எழுந்த அப்பெண் வெளியே அமைந்துள்ள கழிவறைக்கு செல்லும் வேளையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அவரது வாயில் இருந்து நுரையும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவருக்கு பேய்ப் பிடித்திருக்கலாம் எனக் கருதி பாதிரியார் ஒருவரை வரவழைத்துள்ளனர்.

தொடர்ந்தும் அப் பெண் எவ்வித அசைவுகளும் இன்றி இருக்கவே அப் பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது அப் பெண் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எதாவது அதிர்ச்சிகரமான சம்பவமே இதற்கான காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களது உறவினர்கள் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு , பெண்ணின் உடலை சவப்பெட்டியில் அடைத்து, கல்லறைக்குள் அடக்கம் செய்துள்ளனர்.

பின்னர் அடுத்த நாள் அப்பெண்ணின் கணவர் கல்லறைக்கு சென்ற வேளையில் , அதனுள் இருந்து அலறல் சத்தத்தைக் கேட்டுள்ளார் மேலும் கல்லறை அசைவதையும் உணர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் உறவினர்களை வரவழைத்துள்ளார். மேலும் அருகில் இருந்தவர்களுடன் இணைந்து கல்லறையை உடைத்து , சவப் பெட்டியை வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் உறவினர்கள் அப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையில் அவர் உயிரோடு இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் உடலை மீண்டும் அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால் , மருத்துவர்களின் தவறான முடிவே அப் பெண் உயிரிழக்க காரணம் என உறவினர்கள் மற்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

உடலை கல்லறையிலிருந்து வெளியே எடுத்த வேளையில் கூட அவர் உயிரிடன் இருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் சூட்டை உணர்ந்ததாகவும் , உடலின் நிறம் மாறவோ, துர்நாற்றம் வீசவோ இல்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர். அவர் பார்ப்பதற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போலவே தோன்றியதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் சவப்பெட்டியை எடுத்துப் பார்த்த வேளையில் அதன் கண்ணாடி உடைந்திருந்ததாகவும் , அப் பெண்ணின் விரல்களில் கீறல் இருந்த தாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அவர் மயக்கநிலையில் இருந்திருக்க கூடுமெனவும் , கண்விழித்த வேளையில் தன்னை அடக்கம் செய்திருப்பதை தெரிந்து போராடி இருக்கக்கூடுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

<இதனைத் தவிர மயானத்தில் பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக , அங்கிருந்த காப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் தான் அதனை அலட்சியம் செய்த தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply