ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முன்னின்று செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுக்காலை நடந்த சந்திப்பின் போதே, தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிடுகையில்,
‘நிஷா பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் ஆகியோரை சந்தித்திருந்தோம்.
இதன் போது, இப்போது நடந்திருக்கும் ஆட்சி மாற்றம், அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் அனைத்துலக விசாரணை அறிக்கை மற்றும் புதிய அரசாங்கம் எவ்வாறு இந்த பொறுப்புக் கூறல் விடயங்களில் நடவடிக்கை எடுக்கப்போகிறது, இதில் எமது எதிர்பார்ப்புகள் என்ன, என்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.
உடனடியாக செய்ய வேண்டிய மூன்று விடயங்கள் தொடர்பாக நாம் வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்திய போதிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்காது உள்ளது. எனவே, உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
அதேபோல் எமது மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். ஆட்சி மாற்றத்துடன் எமது மக்களின் சொந்த காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்தது.
இந்த விடயமும் இன்னும் தாமதமாகி வருகின்றது. எனவே எமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதேபோல் காணாமல் போனோர் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று விடயங்களை நாம் வலியுறுத்தினோம்.
இந்த மூன்று விடயங்களையும் அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் அனைத்துலக விசாரணை அறிக்கை நடவடிக்கைகளுக்கு அப்பால் இந்த மூன்று விடயங்களுக்கும் உடனடியாக தீர்வு காணும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கத்திடம் தாம் ஆலோசனைகளை முன்வைப்பதாக எமக்கு உறுதியளித்துள்ளனர்.
ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன் அதில் குறிப்பிடப்படும் பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க முன்னின்று செயற்படும் என்று கூறப்பட்டது.
இந்தத் தடவையும் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் எமக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் அனைத்துலக விசாரணை ஒன்றே அமைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல் அரசியல் தீர்வு தொடர்பில் உடனடியாக அரசாங்கத்துடன் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நாம் இவர்களிடத்தில் தெரிவித்தோம்.
இவை எல்லாவற்றுக்கும் முன்னர், நாம் முன்வைத்திருக்கும் முக்கியமான மூன்று விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும்.
இன்னும் தாமதப்படுத்துவது அர்த்தமற்றது என்பதை நாம் இந்தப் பேச்சுக்களில் வலியுறுத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்வாலுடனான சந்திப்புக்கு சுரேஸூக்கு அழைப்பில்லை
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்று புதன்கிழமை (26) நடைபெற்ற சந்திப்பின் போது தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நீர்வேலியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இந்தச் சந்திப்பு தொடர்பில் நான் அறிந்திருந்தேன். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒருவராக இருந்தும் எனக்கு கூட்டமைப்பு தலைமையிடம் இருந்து எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை’ என்றார்.
இதேவேளை, ‘கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடைமுறைப்படுத்தும் போதே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதனை விடுத்து மாற்று வழிகளில் நடந்துகொண்டால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை எப்போதும் பெற்றுக்கொள்ள முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசத்தில் ஒரு சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுவே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும்.
அதனைவிடுத்து வேறு விடயங்களை நாடினால் பிரச்சினைகள் தீரக்கப்படாது. 13 பிளஸ் நடைமுறைப்படுத்தல் போன்றவை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தராது. இது வரலாற்று ரீதியான அனுபவம்’ என்றும் பிரேமசந்திரன் கூறினார்.
‘சிலவேளையில் ஐ.நா விசாரணை அறிக்கையில் உள்ளக விசாரணை என்னும் விடயம் கூறப்பட்டு, அது ஐ.நா மேற்பார்வையின் கீழ் செய்யப்படவேண்டும் என உலக நாடுகளும் கூறக்கூடும்.
அது நிச்சயமாக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்காது. இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையில் கீழ் மட்டத்தில் உள்ள சிலருக்கு மட்டும் தண்டனை வழங்கும்.
சர்வதேச விசாரணை என்பதற்கு அப்பால் சென்று, குற்றங்கள் இடம்பெற்றமைக்கான காரணம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீண்டும் குற்றங்கள் ஏற்படுவதை தடை செய்தல், பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற விடயங்கள் ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை அவசியம் என நாங்கள் கோருகின்றோம்.
உள்ளக என்னும் விடயத்தை எதிர்த்து சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவேண்டும்.
மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம் ஆகியவை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்று சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறினார்.